உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி 6 எருதுகளை பலியிட்டு வழிபாடு

மழை வேண்டி 6 எருதுகளை பலியிட்டு வழிபாடு

விழுப்புரம்: மழை பெய்ய வேண்டி, ஆறு எருதுகள், இரண்டு ஆடுகளை பலியிட்டு, நரிக்குறவர்கள் சிறப்பு பூஜை செய்தனர். விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு ரயில் நிலையம் அருகே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 100 குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவர்கள் முகாமிட்டுள்ளனர்.

இவர்கள், மழை வேண்டி, ஆறு நாள் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.நேற்று, காளியம்மனுக்கு எருது வெட்டும் நிகழ்வு நடந்தது. இதற்காக, ஆந்திராவில் இருந்து, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆறு எருதுகளை வாங்கி வந்திருந்தனர். அந்த எருதுகளை, காளியம்மனுக்கு பூஜை செய்து, நேற்று காலை, 6:00 மணிக்கு, ஒன்றன் பின் ஒன்றாக வெட்டி, பலி கொடுத்தனர்.தொடர்ந்து, இரண்டு ஆடுகளையும் பலி கொடுத்தனர். பின், எருதுகளின் ரத்தத்தால், காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து, வழிபாடு நடத்தினர்.வழக்கமாக, இப்படி பலி கொடுக்கப்படும், மாடு, ஆடுகளின் இறைச்சியை சமைத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால், இவர்கள் அவ்வாறு செய்வது இல்லை. எருது, ஆடுகளின் கறியை வெட்டி, அதை, நன்றாக வெயிலில் உலர வைத்து விடுகின்றனர்.விழாவில் தொடர்ந்து, பால் பூஜை, முன்னோர் வழிபாடு மற்றும் தீமிதி விழா நடத்த உள்ளனர். தீ மிதி விழாவில், காய்ந்த எருதுகளின் கறியை விறகில் கொட்டி, நெய் ஊற்றி எரித்து விடுகின்றனர்.மழை வேண்டி, 10 லட்சம் ரூபாய் செலவில், வழிபாடு நடத்துவதாக நரிக்குறவர்கள் தெரிவித்தனர். எருது பலி கொடுத்த மூன்றாவது நாள், மழை வரும் எனவும், அவர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில், கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, மழை வேண்டி சிறப்பு பூஜை, தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நரிக்குறவர்கள், எருதுகள், ஆடுகளை பலியிட்டு வழிபாடு நடத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !