நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம்: பாஸ்கர தீட்சிதர் பேட்டி
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தில், பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்கின்றனர் என, உற்சவ ஆச்சாரியார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிதம்பரத்தில் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் திருவிழா குறித்து பாஸ்கர தீட்சிதர் கூறியதாவது:சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி ஆனித் திருமஞ்சன மகோற்சவம் வரும் 27ம் தேதி விக்னேஸ்வரபூஜையுடன் துவங்குகிறது. 29ம் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
தினமும் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்று காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு அம்பாள் சிறப்பு வாகன புறப்பாடு செய்யப்படுகிறது. ஜூலை 3ம் தேதி தெருவடைச்சான் சப்பரத்தேரோட்டம், 7ம் தேதி காலை 9 மணிக்கு நடராஜர் தேரோட்டம், 8ம் தேதி மதியம் 3 மணிக்கு ஆனித் திருமஞ்சனம் சிற்சபை பிரவேச தரிசனம் நடக்கிறது. இதனையொட்டி கோவி லில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. வெயில் அதிகமாக இருப்பதால் நான்கு சன்னதி வீதிகள் மற்றும் கோவில் வெளி பிரகாரத்தில் பந்தல் அமைக்கப்படும்.