உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் மலைக்கோவிலில், பிரசாத கடை மூடல்

திருத்தணி முருகன் மலைக்கோவிலில், பிரசாத கடை மூடல்

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலில், சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, முறுக்கு, மிளகு வடை, கற்கண்டு, பேரிச்சபழம் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற பொருட்கள் பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்கு, கோவில் நிர்வாகம் மூலம், ஒப்பந்ததராருக்கு ஆண்டு தோறும் ஏலம் விடப்பட்டு வந்தது.

இதனால், கோவில் நிர்வாகத்திற்கு குறைந்தபட்சம், 1.50 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏலத்தொகை, 1.70 கோடி ரூபாய் நிர்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது.ஏலத் தொகை அதிகம் என, யாரும் பிரசாத கடை ஏலம் எடுக்க முன்வரவில்லை, இரண்டு முறை ஏலம் ஒத்தி வைத்தது. பின், கோவில் நிர்வாகம் ஏலத் தொகை குறைத்து, 1.50 கோடி ரூபாய்க்கு ஏலம் விட்ட போது, பழனியைச் சேர்ந்த ஒருவர், ஏலம் எடுத்து பிரசாத கடை நடத்தி வந்தார்.இதன் ஒப்பந்த தேதி, நேற்று முன்தினம் (ஜூன்., 30ல்) முடிவடைந்தது.

பிரசாத கடை ஏலம் சரியாக போகாததால் நடப்பாண்டில் கோவில் நிர்வாகம் பிரசாத கடை எடுத்து நடத்தும் என, அறிவித்துள்ளதால், நேற்றுடன் (ஜூலை 1ல்), பிரசாத கடை மூடப் பட்டது. அறநிலைய துறை ஆணையர் உத்தரவுக்கு பின்தான், பிரசாத கடை திறப்பதற்கு வாய்ப்புகள் இருக்கும். அதுவரை, பக்தர்கள் மேற்கண்ட பிரசாதங்கள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !