உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை அத்தி வரதரை தரிசித்து அருள் பெற சட்டசபையில் அமைச்சர் அழைப்பு

சென்னை அத்தி வரதரை தரிசித்து அருள் பெற சட்டசபையில் அமைச்சர் அழைப்பு

சென்னை : காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு பின் எழுந்தருளியுள்ள, அத்தி வரதரை தரிசித்து, அருள் பெற அனைவரும் வாருங்கள், என, எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், ராமச்சந்திரன் அழைப்பு விடுத்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: தி.மு.க., - அன்பில் மகேஷ் பொய்யா மொழி: திருவெறும்பூர் தொகுதி, 64வது வார்டு, ரயிலடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்த, அரசு ஆவன செய்யுமா? அமைச்சர் ராமச்சந்திரன்: காஞ்சிபுரம், தேவராஜசுவாமி கோவிலில், அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்த அத்தி வரதர், 40 ஆண்டு களுக்கு பின், நேற்று (ஜூலை., 1ல்) முதல், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

கடைசியாக, 1979ல், அத்தி வரதர் எழுந்தருளினார். அப்போது, எம்.ஜி.ஆர்., ஆட்சி நடந்தது. தற்போது, ஜெ., அரசில், 40 ஆண்டுகளுக்கு பின், எழுந்தருளி உள்ளார். ஜூலை, 1 முதல், ஆக., 17 வரை, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அனைவரும் அத்திவரதரை தரிசித்து, அருள் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்.ரயிலடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு, குடமுழுக்கு நடத்த, மதிப்பீடு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு அறிக்கை பெறப்பட்டு, முதல்வர் ஒப்புதல் பெற்று, குடமுழுக்கு நடத்த, நடவடிக்கை எடுக்கப்படும்.மகேஷ் பொய்யாமொழி: அந்தக் கோவிலில், 1992க்கு பின், கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. கோவிலுக்கு இந்த ஆண்டாவது, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கோவில் குருக்கள், என்னை சந்தித்து, எனக்கும், நல்ல பதில் கூறப் போகும் அமைச்சருக்கும் பிரசாதம் கொடுத்தார்.

அவர் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். இது, அப்பகுதி மக்கள் விருப்பம்.அமைச்சர்: இந்த ஆண்டே நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !