மன்னை ராஜகோபால ஸ்வாமி கோவில் திருவிழாவில் பட்டாபிராமர் தரிசனம்
மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவில் பங்குனி திருவிழாவில் பட்டாபிராமர் கோலத்தில் பக்தர்களுக்கு வித்யராஜகோபாலன் தரிசனம் அளித்தார். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவில் பங்குனி திருவிழாவின் எட்டாம்நாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு வெகு விமர்சையாக நடந்தது. இரவு 9 மணியளவில் ஸ்ரீ வித்யா ராஜகோபாலனுக்கு பட்டாபிராமர் திருக்கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, ரிஷிய முகபர்வத வாகனத்தில் அமர்ந்து திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியையொட்டி வாணவேடிக்கைகளும், இன்னிசை கச்சேரிகளும் நடந்தது. முன்னதாக, காலை எட்டு மணியளவில் கோவிலில் இருந்து பல்லக்கு சேவை நிகழ்ச்சி நடந்தது. ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக நேற்றுக்காலையில் எட்டு மணியளவில் பல்லக்கு சேவை நடந்தது. ஏற்பாடுகளை விஸ்வபிராமண பட்டறையாளர்கள் சிறப்பாக செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கினர். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.