மாசிப்பெருந்திருவிழா நிறைவு: முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்!
புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா நிறைவு நாளான நேற்று ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்துவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்று திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசிப்பெருந்திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 4ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12ம் தேதி திருத்தேரோட்டம் நடந்தது. பக்தர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பஜைகள், வழிபாடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்றுடன் மாசிப் பெருந்திருவிழா நிறைவடைந்தது. விழாவுக்காக காட்டு மாரியம்மன் கோவிலில் எழுந்தருளிய முத்துமாரியம்மன் மீண்டும் புஷ்ப பல்லக்கில் திருக்கோவில் வந்துசேர்ந்ததும் அம்மனுக்கு காப்புகள் களையப்பட்டு மஞ்சள் நீராட்டு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். மஞ்சள் நீராட்டை தொடர்ந்து திருக்கோகர்ணம் அக்ரஹாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்துடன் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாசிப் பெருந்திருவிழா நிறைவு நாளான நேற்று ஏராளமான பெண்கள் காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
திருக்கோவிலை வலம்வந்த பின்னர் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் புஷ்கரணியில் அவற்றை கரைத்து நேர்த்திக்கடனை நிறைவுசெய்தனர்.