ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சக்திமாலை இருமுடி விழா துவக்கம்
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி விழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் சக்தி மாலை இருமுடி விழா நடைபெறும்.
இந்தாண்டு தைப்பூச ஜோதி விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மன், பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதன் பின் இருமுடி அபிஷேகத்தை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர், காலை 5:45 மணிக்கு துவக்கி வைத்தனர். செவ்வாடை பக்தர்கள், அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இவ்விழா, வரும் ஜன., 31ம் தேதி வரை நடைபெறும். பிப்., 1ம் தேதி, தைப்பூச ஜோதி விழா நடைபெற உள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து, விரதம் இருந்து சித்தர் பீடத்திற்கு வந்து இருமுடி செலுத்த உள்ளனர். விழாவையொட்டி, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக செல்லும் விரைவு ரயில்கள், மேல்மருவத்துார் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மாவட்ட எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், தினமும் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர். விழா ஏற்பாடு களை , சித்தர் பீட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சிறப்பு ஏற்பாடு விழாவை முன்னிட்டு தகவல் மையங்கள், வாகன நிறுத்தம், முதலுதவி மையம், ஆம்புலன்ஸ் வசதி, தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.