’போர்வெல்’: தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆபத்து
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், ராஜராஜ சோழன் சிலை அருகே, 500 அடி ஆழத்தில், ’போர்வெல்’ அமைக்கும் பணி நடக்கிறது. ’இதனால், கோவிலுக்கு ஆபத்து ஏற்படும்’ என, வரலாற்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தஞ்சாவூர் பெரிய கோவில், யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக, அறிவிக்கப் பட்டுள்ளது. 1,000 ஆண்டுகளை கடந்தும், சோழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. பெரிய கோவிலில், ராஜராஜ சோழன் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தில், 500 அடி ஆழத்திற்கு, புதிதாக போர்வெல் அமைக்கப்படுகிறது. ’போர்வெல் அமைக்கப்பட்டு, தண்ணீரை உறிஞ்சுவதன் மூலம், கோவில் கட்டுமானத்திற்கு ஆபத்து ஏற்படும்’ என, வரலாற்று ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, பெரிய கோவில் பாதுகாப்பு குழுவினர் கூறியதாவது: சோழன் சிலை அமைந் துள்ள இடத்தில், மாநகராட்சி சார்பில், ஏற்கனவே, 120 அடி ஆழத்தில், போர்வெல் அமைக்கப் பட்டுள்ளது. அதில், தண்ணீர் வராததால், மீண்டும் புதிதாக, 500 அடி அழத்திற்கு போர்வெல் அமைக்கும் பணியை துவங்கியுள்ளனர். கோவிலை சுற்றி, 1 கி.மீ.,க்கு போர்வெல் அமைக்கக் கூடாது என்பது, தொல்லியல் துறையின் விதி. அதையும் மீறி போர்வெல் அமைக்கப்படும் நிலையில், தண்ணீரை தொடர்ந்து உறிஞ்சினால், கோவில் கட்டுமானத்திற்கு ஆபத்து ஏற்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தஞ்சை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ராஜராஜ சோழன் சிலை உள்ள இடத்தில், மாநகராட்சி சார்பில், பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தண்ணீர் இல்லாததால் மரம், செடி, கொடிகள் எல்லாம் காய்ந்து விட்டன. இதனால், புதிதாக போர்வெல் அமைக்கிறோம். ஏற்கனவே, மாநகராட்சி கட்டுப்பாட்டில் இந்த இடம் இருப்பதால், யாரிடமும் அனுமதி வாங்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
தொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் கூறுகையில், ”விதிமுறையை மீறி, போர்வெல் போடும் பணியை நிறுத்த வலியுறுத்தி, மாநகராட்சி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,” என்றார்.