லண்டன் செல்லும் அர்த்தநாரீஸ்வரர் சிலை!
அவிநாசி:அவிநாசியில் உருவாக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலை, லண்டனுக்கு அனுப்பப்பட்டது.அவிநாசி ஸ்ரீஞானாம்பிகை சிற்ப தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட பல சிற்பங்கள், கனடா, அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளுக்கும், உள்நாட்டுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. அங்கு உருவாக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சிலை, நேற்று லண்டனுக்கு அனுப்பப்பட்டது. ஸ்தபதிகள் ராஜேந்திரன், ஆனந்தன், மணிகண்டன் ஆகியோர் கூறுகையில், ""எங்களது சிற்ப தொழிற்சாலையில், ஆறு மாதங்களாக நான்கு சிற்பிகளால் அர்த்தநாரீஸ்வரர் சிலை உருவாக்கப்பட்டது. பீடத்துடன் எட்டடி உயரமும், மூன்றரை அடி அகலமும், ஒன்றே முக்கால் அடி கனமும் கொண்ட சிலையின் மொத்த எடை 850 கிலோ. சிலையின் வலது கையில் அபயஹஸ்தம், கதாயுதமும், இடக்கையில், நீலோத்பவம் மலருடன் சிற்ப சாஸ்திர முறைப்படி உருவாக்கப்பட்டுள்ளது. இச்சிலை, இன்று (நேற்று) லாரி மூலம் தூத்துக்குடி அனுப்பப்பட்டு, நாளை (இன்று) கப்பல் மூலம் லண்டன் செல்கிறது. அங்குள்ள "லார்ட் சிவா என்ற அருங்காட்சியகத்தில் இச்சிலை நிறுவப்படுகிறது. ஊத்துக்குளியில் இருந்து எடுக்கப்பட்ட நீரோட்டமுள்ள கருங்கல்லில் சிலையை உருவாக்கினோம், என்றனர்.