உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வி.கே.புரம் கோயிலில் திருப்பணிகள் தீவிரம்

வி.கே.புரம் கோயிலில் திருப்பணிகள் தீவிரம்

விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரம் வழியடிமை கொண்ட நாயகி சமேத சிவந்தியப்பர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.விக்கிரமசங்கபுரத்தில் உள்ள சிவந்தியப்பர் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன் சிவந்தியப்பநாயக்கரால் கட்டப்பட்டது. இக்கோயிலில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு சிவபாலேஸ்வரர் என்றும், பார்வதிக்கு மார்க்கசம்ரஷி என்ற பெயரும் உண்டு. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் சிவன் பக்தர்களின் பாவங்களை அக்னி மூலம் எரித்து சாம்பல் ஆக்கிவிடுகிறார் என்பதால் சிவனுக்கு சிவன்-தீ-அப்பர் என்ற பெயரும், சிவந்தியப்பநாயக்கர் என்ற அரசன் கட்டியதால் சிவனுக்கு அரசர் பெயரால் சிவந்தியப்பா என்ற பெயரும் வைத்து அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. சுமார் 155அடி நீளமும், 60அடி அகலமும் கொண்ட இக்கோயிலில் சிவந்தியப்பர், வழியடிமை கொண்ட நாயகி, தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், நடராஜர், பைரவர் போன்ற பல்வேறு தெய்வங்கள் குடி கொண்டிருக்கின்றனர். இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி நடந்தது. சுமார் 16 ஆண்டுகளுக்குப்பின் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் விரும்பியதால் கடந்த சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் கோயிலில் பாலாலயம் நடந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கும்பாபிஷேக பணிகள் துவக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கோயிலில் விநாயகர், முருகன், சுவாமி அம்பாள், நடராஜர், நமச்சிவாயமூர்த்தி, நால்வர் சன்னதி ஆகியவைகளுக்கு விமானம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கோபுர வேலை, கொடிமரம் பராமரிப்பு பணி போன்ற பல்வேறு பணிகள் நடக்கவிருக்கிறது. கும்பாபிஷேக பணிகளை திருவாடுதுறை ஆதீனமும், சிவந்தியப்பர் கோயில் நற்பணி மன்றமும் இணைந்து நடத்துகின்றனர். திருவாடுதுறை ஆதினம் சீர்வளசீர் குருமகா சன்னிதானம் மேற்பார்வையில் கும்பாபிஷேக பணிகள் நடக்கிறது. இந்நிலையில் கோயில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகளில் மக்களின் பங்கும் இருக்க வேண்டும் என்று சிவந்தியப்பர் கோயில் நற்பணி மன்றத்தினர் விருப்பப்படுவதால் நன்கொடை அளிக்க விரும்புவோர் நற்பணி மன்றத்தின் தலைவர் கே.எஸ்.ஆறுமுகம் (செல்:98423 24567), பாலசுப்பிரமணியன் (செல்: 97893 93528) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !