பெற்றோர் சொல்லை கேட்க வேண்டுமா!
சொல்லை உங்கள் குழந்தை கேட்க வில்லையா? நேராக புதுக்கோட்டை திருவெப்பூரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலுக்கு செல்லுங்கள். அம்மனுக்கு அபிஷேகம் செய்தால் உங்கள் சொல்படி குழந்தை திருந்துவர்.
புதுக்கோட்டை வெள்ளாற்றங் கரையில் புற்று ஒன்று இருந்தது. அவ்வழியாக வந்த வேடர்கள் சிலர், புற்றுக்குள் அம்மனின் சிலை இருப்பதைக் கண்டு, ’காட்டு மாரியம்மன்’ எனப் பெயரிட்டனர். பிற்காலத்தில் புதுக்கோட்டை மன்னர் திருவெப்பூரில் இந்த அம்மனை பிரதிஷ்டை செய்து’முத்து மாரியம்மன்’ என பெயரிட்டார். மன்னரின் திருப்பணியால் கோயில் விரிவடைந்தது. சாந்தமான முகம், குளிர்ந்த பார்வையுடன் இந்த அம்மன் காட்சியளிக்கிறாள். பொதுவாக அம்மனின் திருவடியில் அசுரனின் தலை இருக்கும். ஆனால் இங்கோ தாமரை மலர் உள்ளது. கைகளில் திரிசூலம், உடுக்கை உள்ளன.’திரிசூலம் மார்பில் குத்துவது போல கடுஞ்சொற்களால் ஒருவர் தாக்கினாலும், உடுக்கை ஒலிப்பது போல அவதூறாகப் பேசினாலும், தாமரை மலராக குளிர்ந்த பார்வையால் திருத்தி விடு’ என்பதே இதன் தத்துவம். தவறு இழைத்தவர்கள், நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்அம்மனிடம், ’தாயே...இனி தவறு செய்ய மாட்டேன்’ என சத்தியம் செய்து பாவத்திற்கு பரிகாரம் தேடுகின்றனர். உடலில் ஏற்படும் கட்டிகள், பருக்கள் நீங்கிட வெல்லம், உப்பு காணிக்கை செலுத்துகின்றனர். தீய சிந்தனைகள் மறையவும், அடம் பிடிக்கும் குழந்தைகள் திருந்தவும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளியன்று பால் அபிஷேகம் செய்கின்றனர். அம்மை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் தீர்த்தம் குடித்து குணமடைகின்றனர்.