கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில் திருவிழா: பெண்கள் பால் குட ஊர்வலம்
கிருஷ்ணகிரி: மஹா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காரகுப்பம் சாலையில் உள்ள அரசமரத்து மஹா மாரியம்மன் கோவிலில், 16ம் ஆண்டு திருவிழா நடந்தது. இதில் பரிவார தெய்வங்கள், நாகக்கன்னி, ப்ரத்தியங்கராதேவி, முத்தரம்மன், வராகி, நாகராஜா சுவாமிகளுக்கு கடந்த, 16 காலை, 10:30 மணிக்கு விரதகாப்பு கட்டுதல், கூழ் ஊற்றுதல் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று (ஜூலை., 19ல்) காலை, பர்கூர் பாரத கோவிலில் கணபதி ஹோமம் நடந்தது. பூங்கரகம், பால் குடங்களை பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று, அம்மனுக்கு பால் அபிஷேகம், தீபாராதனை செய்தனர்.
மாலையில், சுமங்கலி திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கணேஷ் நகர் அரசமரத்து மஹா மாரியம்மன் கோவில் சேவைக் குழுவினர் செய்திருந்தனர்.