உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்திவரதர் தரிசனமே மனித பிறவியின் மகத்துவம்

அத்திவரதர் தரிசனமே மனித பிறவியின் மகத்துவம்

 திருப்பூர்:மனித பிறவி எடுத்த நோக்கம் நிறைவேற, ஒருமுறையாவது, அத்தி வரதரை தரிசிக்க வேண்டும், என, கோமடம் சுவாமி பேசினார்.திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில், கோமடம் சுவாமி, பராசர சுவாமிகளின், ஸ்ரீமத் பாகவத தொடர் சொற்பொழிவு  நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு, கோமடம் சுவாமி பேசியதாவது:காஞ்சிபுரம் அத்திவரதர் சிலை, 350 ஆண்டுகளுக்கு முன், அத்திமரத்தில் செய்தது. முந்தைய காலத்தில், இஸ்லாமிய அரசர்களுக்கு அஞ்சி, சிலைகளை மறைத்து வைத்தனர். காஞ்சியில் உள்ள வரதராஜர்  பெருந்தேவி தாயார் உற்சவர் சிலைகள் கூட, திருச்சியில் உள்ள கோவிலில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள கல்வெட்டே அதற்கு சாட்சி.கேட்ட வரங்களை வாரிக்கொடுப்பதில் ராஜாவாக இருப்பது வரதராஜ பெருமாள் மட்டுமே. ராமானுஜர், தனது  பெற்றோரை போல், தாயார் மற்றும் எம்பெருமானுடன் உறவாடி கொண்டிருந்தார். ஆதி அத்திவரதர், 48 நாட்கள் தரிசனம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.மனித பிறவி எடுத்த நோக்கம் நிறைவேற, வாழ்வில் ஒருமுறையாவது, அத்தி வரதரை கட்டாயம் தரிசனம் செய்ய  வேண்டும். வாழ்வில் மட்டுமல்ல, கோவில் தரிசனத்திலும் குறுக்கு வழியில் போனால் கடாட்ஷம் இல்லை. இறைவன் மீது, ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லாமல், உண்மையான அன்பும், பக்தியும் இருந்தால், நடந்தே வைகுண்டம் சென்றுவிட  முடியும்.நல்ல மனிதனாக மகன் உயர வேண்டும் என்றுதான், தாய் விரும்புவாள்; அதே போல், ஒவ்வொருவரும் நல்லகதியை அடைய வேண்டும் என்றுதான் எம்பெருமான் விரும்புவார். ஒவ்வொருவருக்கு உள்ளேயும், எம்பெருமான் வாசம் செய்கிறார். நம்  செயல்பாடுகளை பொறுத்து, வாழ்க்கை அமையும். நமக்குள், மனசாட்சியென வாழ்ந்திருக்கும் இறைவன், தவறுக்கு ஏற்ற தண்டனையை வழங்குவான்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !