கரிவலம் புதுமாரியம்மன் கோயிலில் 27ம் தேதி கொடியேற்றம்
திருவேங்கடம் : கரிவலம்வந்தநல்லூர் புதுமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 9 நாட்கள் நடக்கிறது.கரிவலம்வந்தநல்லூர் புதுமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வரும் 27ம் தேதி காலை மலை தீர்த்தம் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகிறது. அன்று இரவு அம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் இரவு 8 மணிக்கு அம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. 4ம் திருநாளான 30ம் தேதி இரவு அம்மன் இரு கையில் அக்னிசட்டி ஏந்தி ஊர் விளையாடுதல் நடக்கிறது. ஏப்.1ம் தேதி காந்திமதியம்மாள் தலைமையில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. 8ம் திருநாளான 3ம் தேதி காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு விசேஷ அலங்கார தீபாராதனை, இரவு முளைப்பாரி அழைப்பு, கும்மிபாட்டு, அம்மன் அழைப்பு, வாய்ப்பூட்டுடன் 41 அக்னிசட்டியோடு அம்மன் கரகமெடுத்து திருவீதிஉலா வருதல், தோண்டி கயிறு இடுதல், ஆயிரங்கண்பானை, மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்தல் ஆகியன நடக்கிறது.9ம் திருநாளான 4ம் தேதி காலை 8 மணிக்கு பொங்கலிட்டு வழிபாடு, மாலை 4 மணிக்கு செலாக்குத்துதல், கயிர் குத்துதல், காளைமாடு கயிர் குத்துதல், 5 மணிக்கு முளைப்பாரி வழி அனுப்புதல், 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 7 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு அலங்கார அவதார காட்சியும், இரவு கும்மிபாட்டும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை புதுமாரியம்மன் கோயில் பூசாரி சஞ்சீவியாபிள்ளை, விழாக் கமிட்டியினர் செய்துள்ளனர்.