அத்திவரதரை தொடர்ந்து பூஜிக்க வேண்டும்: ஸ்ரீவி., ஜீயர்
ஸ்ரீவில்லிபுத்துார்:48 நாட்கள் தரிசனத்திற்கு பின் அத்திவரதரை மீண்டும் தண்ணீரில் வாசம் செய்வதற்கு பதில், பக்தர்கள் பூஜிக்கும் வகையில் வைக்கவேண்டும், என ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர் வேண்டுகோள் விடுத்தார்.
அவர் கூறியதாவது: உலக கஷ்டங்களை போக்க அத்திவரதர் எழுந்தருளி உள்ளார். இதனால்தான் மழை பெய்ய துவங்கி உள்ளது. அவரை தொடர்ந்து பூஜிக்க நல்லவை நடக்கும். அதனால்தான் காஞ்சிபுரம் இன்று திருப்பதிக்கு நிகராக பூஜிக்கப்படுகிறது. அத்திவரதரை தொடர்ந்து பூஜிக்கும் வகையில் வெளியில் வைக்கவேண்டும்.சில நாட்களுக்கு முன் உபந்நியாசர் கிருஷ்ணபிரேமியின் கனவில் தோன்றிய அத்திவரதர், மீண்டும் என்னை குளத்தில் வைக்க போகிறீர்களா என கேட்டது தெய்வத்தின் குரல் போன்றது. தற்போதுள்ள அதே இடத்தில் அத்திவரதரை வைத்து பூஜிக்கவேண்டும் என்பது மடாதிபதிகளின் கருத்து.இதுகுறித்து முதல்வர், துணை முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம். இதற்கு அரசும், காஞ்சிபுரம் கோயில் பெரியவர்களும் முடிவு செய்யவேண்டும். தொடர்ந்து அத்திவரதரை பூஜிக்க, மழைபெய்து நாடு சுபிட்சம் அடையும், என்றார்.