பாரம்பரியம் பறைசாற்றும் திருவிழாக்கள்
சமூகத்தின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் பறைசாற்றி நிற்பது திருவிழாக்கள். அதிலும் கிராமங்களில் நடக்கும் விழாக்களில் உறவுகளின் ஆழத்தையும், உள்ளத்தின் உணர்வுகளையும் யதார்த்தமாக காண முடியும். பழங்காலந்தொட்டே திருவிழாக்களின் அடிச்சுவடுகள் இருந்துள்ளன என்பதனை இலக்கியங்கள் நம் முன் வைக்கிறது.
குறிப்பாக பூம்புகாரில் நடைபெற்ற இந்திரவிழாவினை சிலப்பதிகாரம் கற்றுக் கொடுக்கிறது. இன்றைக்கு விஞ்ஞான வளர்ச்சி பெற்று விட்டாலும் மண் மணம் மாறாத பண்பாடு திருவிழாக்களில் அடிநாதமாக தன்னை அடையாளப்படுத்தி நிற்பது தமிழர்களுக்கே உரிய தனிச்சிறப்பு.சமத்துவம்ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றான் பாரதி. ஆனால் ஜாதிகளும் சமயங்களும் இல்லாமலா போயிற்று? போகாது. காரணம் பிறப்புத் தொடங்கி இறப்பு வரைக்கும் ஒவ்வொரு அசைவிலும் ஜாதியே பிரதானமாக முன்னிலைப்படுத்தப்படுகிறது.
ஜாதிக்கு ஒரு சங்கமும், ஜாதிக்கு ஒரு சாமியும் வைத்து வழிபாடு செய்து கொண்டு இருக்கிறோம். இவ்வளவு வலிமை வாய்ந்த ஜாதிப்பாகுபாட்டினைக் கூட திருவிழாக்கள் எனும் திரைச்சீலை முடி வைத்து விடுகிறது. எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் வேறுபாடுகளை நாம் சுட்டிக்காட்டத் தேவையில்லை. ஆனால் பெரும்பான்மையான தமிழர் திருவிழாக்களில் ஜாதிகளை மறந்து சமத்துவமாக வாழும் வாழ்வியலை காண முடியும். சாமிக்கு முன் அனைவரும் சமம் என்பதனை திருவிழாக்கள் தான் திசை எட்டும் பரப்புகிறது. ஒதுங்கிப் போனவர்கள் கூட ஆரத்தழுவி அன்பைப் பரிமாறும் அடையாளத்தை நாம் காண முடியும்.
அறநெறிவீரத்துடன் வாழமுடியவில்லை என்றாலும் அறத்துடன் வாழ வேண்டும். இது தானே நம் பாரம்பரியப் பண்பாடு. இதனை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கற்றுக் கொடுப்பது திருவிழாக்கள். தான் உண்ணும் மூன்று வேளை உணவைக் கூட ஒரு வேளையாகக் குறைத்துக் கொண்டு விரதம் மேற்கொள்கின்றனர். வேண்டி வந்தோருக்கு அன்னமிட்டு மகிழ்கின்றனர். தானத்தில் சிறந்தது அன்னதானம் தானே என அதனை நிறைவேற்றுகின்றனர். இறைவன் நினைப்பால் இருக்கும் இடமும் உடுத்தும் உடையும் துாய்மை பெறுகிறது.
இல்லமும் உள்ளமும் அமைதி கொள்கிறது. இறைவனின் நினைப்பில் நிசப்தம் ஆகிறது. இயன்றதைச் செய்வோம்... இல்லாதவருக்கு என்ற அறக்கோட்பாடு ஆழமாக பதியம் போடுகிறது. அனைவரும் கண்ணியமான வாழ்வினை வாழக் கற்றுக் கொடுக்கிறது என்றால் இத்திருவிழாக்களின் வலிமையையும் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். திருவிழாக்கள் எனும் வாயில் வழியே தான் ஒரு சமூகத்தின் பண்பாட்டை காண முடியும் என்பார்கள். தமிழர் திருவிழாக்களே அதற்கான சாட்சி.சங்கமிக்கும் சந்தோஷம் வீட்டில் நான்கு அறைகள், ஒவ்வொரு அறையிலும் ஒரு அலைபேசி அடித்துக் கொண்டிருக்கும், சுவற்றில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும், கம்ப்யூட்டரில் காணொலிக் காட்சிகள் சத்தமிட்டுக் கொண்டிருக்கும்.
இத்தனை வசதிகளும் பணம் கொடுத்து நாம் வாங்கி வந்து வைத்து சந்தோஷப்படுகிறோம். பக்கத்து வீட்டுக்காரன் பார்வைக்கு நாம் பகட்டாக வாழவேண்டும் என்று போலியான வாழ்க்கையை உருவாக்கி பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறோம். இதில் வருவது சந்தோஷமா என்றால் இல்லை. கடன் தான் காதை அடைக்கும். மூன்றாவது வீட்டில் வசிப்பவரின் முகவரி தெரியாது, உறவுகளின் முறைகள் கூடத் தெரியாமல் நாம் வாழப் பழகிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நம்மூர்த் திருவிழாக்களில் போய்ப் பாருங்கள் அங்கு கிடைக்கும் சந்தோஷமும், அரவணைப்பும் கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காது. ஊரோடு சேர்ந்து உரிமைக்கு வரிகொடுத்து உறவுகளை தன் வீட்டிற்கு அழைத்து, இருக்கும் உணவை இல்லாதவர்களோடு பகிர்ந்து உண்டு, கதைகள் பல பேசி, நலம் விசாரித்து அன்போடு உறவாடி சங்கமிக்கும் சந்தோஷத்தைக் காண கண் கோடி வேண்டும். தமிழரின் உபசரிப்பையும், உறவுகளின் வரவினையும் இத்திருவிழாக்கள் கற்றுக்கொடுக்கிறது. கூத்துக்கலை தமிழரின் பாரம்பரிய பண்பாட்டுக் கலைகளை, கூத்துக் கலைகளை இன்று வரைக்கும் வாழ வைத்துக் கொண்டிருப்பது திருவிழாக்கள் என்பது நிதர்சனம். இன்றைய தலைமுறைக்கு பல கலைகளின் பெயர்கள் கூடத் தெரியாது. அவர்களுக்கும் கலைகளின் பண்பாட்டு அடிச்சுவட்டை கற்றுக் கொடுப்பது திருவிழாக்கள், கும்மிபாடல் தொடங்கி கரகாட்டம், மேளதாளம், மேடை நாடகம் என பல்வேறு கலைகளை இவ்விழாக்களில் பார்க்க முடியும்.
அழிந்து போன கலைகளை மீட்டெடுப்பதும் இருக்கும் கலைகளை பாதுகாப்பதும் இவ்விழாக்கள் தான்.இதன்மூலம் பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது. பழமை போற்றப்படுகிறது. கலைகள் வாழவைக்கப்படுகிறது. தமிழரின் பண்பாட்டு மரபுகளை இக்கலைகள் இன்றைய தலைமுறைக்கும் எடுத்துரைத்து நிற்கிறது. கலைஞர்களும் வாழவைக்கப்படுகிறார்கள். தமிழர் திருவிழாக்களின் மையப்பொருளே பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கட்டிக்காப்பது என்பது கவனிக்கதக்கது.இளைய தலைமுறைக்குமுளைப்பாரி, புரவி எடுப்பு, மாவிளக்கு, அக்னிச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல் இப்படி பல்வேறு திருவிழாக்கள் இன்றைக்கும் நடைமுறையில் இருந்துகொண்டு இருக்கிறது.
இத்திருவிழாக்கள் ஊர், நாடு நலம் பெற உறவுகள் மகிழ்வு கொள்ள நடந்து வருகிறது. முளைப்பாரி இடுவது பயிர் செழித்து வளரவேண்டும் என்ற குறியீட்டை தன்னுள் கொண்டுள்ளது. இப்படி பண்பாட்டோடு தொடர்புடைய திருவிழாக்கள் அனைத்தும் பாரம்பரியத்தை பறைசாற்றி நிற்கிறது. ஆனால் இணையத்தில் இணைந்து கொண்டு திரையில் மட்டும் தான் இவற்றை பார்த்துக்கொண்டிருக்கிறது இன்றைய தலைமுறை.அவர்களை கிராமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்; விழாக்களின் பெயர்களை சொல்லிக்கொடுங்கள். அதன் வலிமையான நிகழ்வுகளை காணச் சொல்லுங்கள். உறவுகளை சுட்டிக்காட்டுங்கள், உறவு முறைகளை சொல்லிக் கொடுங்கள். திருவிழாக்கள் என்பது பொழுதுபோக்கான நிகழ்ச்சி மட்டும் அல்ல; ஒரு இனத்தின் பாரம்பரியத்தை சுமந்து கொண்டிருக்கும் சுமைதாங்கிக் கல். தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் இத்திருவிழாக்களின் பெருமையை எந்நாளும் காப்போம்.--மு.ஜெயமணி உதவிப்பேராசிரியர் இராமசாமி தமிழ்க்கல்லுாரிகாரைக்குடி84899 85231