உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் அருகே 10ம் நுாற்றாண்டு வட்டெழுத்து செக்கு உரல் கண்டுபிடிப்பு

திண்டுக்கல் அருகே 10ம் நுாற்றாண்டு வட்டெழுத்து செக்கு உரல் கண்டுபிடிப்பு

போடி:தேனி மாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லுாரி வரலாற்றுத்துறை மூலம்  திண்டுக்கல் அருகே நரசிங்கபுரத்தில் கி.பி.,10 ம் நுாற்றாண்டை சேர்ந்த  வட்டெழுத்துக்கள் உள்ள செக்கு உரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கல்லுாரி முதல்வர் ராஜகுமாரன் தலைமையில் உதவி பேராசிரியர்கள்  மாணிக்கராஜ், கருப்பசாமி, நெல்லுார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்  கருப்பையா, மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளர்  பேராசிரியர் சாந்திலிங்கம், பேராசிரியர் உதய குமார், மாணவர்கள் ராம்குமார்  ஆகியோர் பழமையான கல்வெட்டுகள், கற்கள், மண்ணில் புதைந்துள்ள கற்கால  பொருட்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல்  அருகே நரசிங்கபுரம் மேற்கே உள்ள புணல்காடு பகுதியில் கி.பி.10 ம் நுாற் றாண்டை சேர்ந்த வட்டெழுத்துக்கள் பதியப்பட்ட செக்கு உரல்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சாந்திலிங்கம் கூறியதாவது: பண்டை  காலத்தில் மக்களின் வாழ்க்கையும், வாழ்விடமும் மலையும் மலை சார்ந்த  இடமாக இருந்துள்ளது.

இப்பகுதியில் வட்டெழுத்துக்கள், பானை ஓடுகள்,  நடுகற்கள் போன்ற தொன்மையான வரலாற்று தடயங்கள் கிடைத்து வருகின்றன. இங்கு கிடைத்த செக்கு உரல் மூன்று அடி ஆழத்தில் பாறையில்  வெட்டப்பட்டுள்ளது.

அந்த உரலில் ’ஸ்ரீ முது நீர் முரி மீ மங்கரை யுகந்து தட்டான் ஆசிரியம் பாறைய் இதனய் காப்பவன் செல்லக்கலிங்கரையன் மகன் யிட்ட செக்கு’ என குறிக்கப்பட்டுள்ளது.முது நீர் முரி மீ மாங்கரை என்பது இந்த இடத்தை குறிக்கும்  சொல்லாகும். தட்டான் என்ற வார்த்தை பொற்கொல்லரை குறிக்கும். ஆசிரியம்  என்பது அடைக்கலம் கொடுக்கும் இடம் என்ற பொருளை தரும்.

ஒரு  பொற்கொல்லர் வேறு ஒரு இடத்திலிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக  இங்குவந்து மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பிற்காக  செல்லக்கலிங்கரை என்பவரின் மகனை நியமித்துள்ளார். இவர் மக்களின்  பயன்பாட்டிற்காக செக் உரல் வெட்டி தந்துள்ளார் என இந்த சான்று கூறுகிறது,  என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !