சதுரகிரி கோயிலில் அன்னதான மடங்களுக்கு தடை
மதுரை, :சதுரகிரி மலைக் கோயில் ஆடி அமாவாசைக்கு வரும் பக்தர்களுக்கு உணவு குடிநீர் வழங்கப்படும். அன்னதான மடங்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
கமுதி அருகே பெருநாழி வழக்கறிஞர் முத்திருளப்பன் தாக்கல் செய்த மனு:மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா மேற்குத் தொடர்ச்சி மலையில் சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் மற்றும் சந்தன மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். அன்னதான மடங்கள் மூலம் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. மடங்களை அறநிலையத்துறையினர் மூடினர்.தற்போது ஓட்டல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உணவு குடிநீர் அதிக விலைக்கு விற்பனையாகிறது. அன்னதான மடங்களை திறக்க வேண்டும். கழிப்பறைகளை சுத்தம் செய்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குடிநீர் வசதி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு முத்திருளப்பன் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.கோயில் நிர்வாகம் தரப்பில் சதுரகிரி கோயிலுக்கு ஆடி அமாவாசைக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளது. குடிநீர் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. கோயில் பகுதியில் 12 இடங்களில் பக்தர்களுக்கு கஞ்சி உட்பட உணவுகள் வழங்கப்படும். வாழை தேக்கு பாக்கு மட்டை இலைகளில் உணவு வழங்கப்படும். பாலிதீன் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. அன்னதான மடங்களுக்கு அனுமதியில்லை. அன்னதானம் வழங்க விரும்புவோர் மலை அடிவாரத்தில் நுழைவு வாயில் பகுதியில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள் அன்னதானம் வழங்க விரும்புவோர் நுழைவுவாயில் சோதனைச் சாவடி அருகே வழங்கலாம். இதில் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுகாதாரம் பேண வேண்டும். அரசுத்தரப்பில் ஆக.19ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.