பேரூரில் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழா
தொண்டாமுத்தூர்; பேரூரில், ராஜராஜ சோழனின் 1040வது, சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த சேழ மாமன்னரும், தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டியவருமான ராஜராஜ சோழனின், சதய விழா ஆண்டுதோறும் தஞ்சை பெரிய கோவிலில், வெகு விமர்சையாக கொண்டாடப்படும். திருவாவடுதுறை ஆதினத்தின் பேரூர் கிளை மடத்தில், கடந்த, 2019ம் ஆண்டு முதல், ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜராஜ சோழனின், 1,040வது சதய விழா, பேரூர் திருவாவடுதுறை ஆதின கிளை மடத்தில், ஏழாம் ஆண்டாக, இயல், இசை, நாடகம் என, முப்பெரும் விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதில், மாலை, 6:00 மணிக்கு, ராஜராஜ சோழன் திருமேனிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு, திருமஞ்சன வழிபாடு செய்யப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு, ராஜராஜ சோழன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து, ராஜராஜ சோழனின் பெருமைகள் குறித்து சொற்பொழிவுகள் நடந்தது. தொடர்ந்து, பேரொளி வழிபாடும், அன்னம் பாலிப்பும் நடந்தது. இதில், தியாகராஜன், திருத்தணி ஓதுவார் சாமிநாதன், சதய விழா குழு சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.