கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
மூங்கில்துறைப்பட்டு: நவ. 2–: மூங்கில்துறைப்பட்டு அருகே கோவிலில் இருந்த 2 உண்டியல்களை உடைத்து காணிக்கையை திருடி விட்டு, அருகில் உள்ள குளத்தில் வீசிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லுார் சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் கோவிலை திறந்த பூசாரி, கோவிலில் வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவல் அறிந்த பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் சலாம் உசேன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வைத்திலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அருகில் உள்ள குளம் வரை மர்ம நபர்கள் எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. அதன் பேரில், பொதுமக்கள் உதவியுடன் போலீசார் குளத்தில் உண்டியல்களை எறிந்திருக்கலாம் என்ற கோணத்தில் குளத்தில் இறங்கி தேடினர். அப்போது 2 உண்டியல்களும் குளத்தில் இருந்தது அதனை வெளியே எடுத்தனர். மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடி விட்டு குளத்தில் வீசியிருப்பது தெரியவந்தது.
வடபொன்பரப்பி போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதே கோவிலில் 2 மாதங்களுக்கு முன் உண்டியலில் உடைத்து திருட முயன்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து குறிப்பிடத்தக்கது.