பக்தர்கள் வெள்ளத்தில் முருகன் கோவில்கள்
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட முருகன் கோவில்களில், ஆடிக்கிருத்திகை, அமோகமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, காவடி எடுத்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள, குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆடி கிருத்திகை விழாவையொட்டி, நேற்று, அதிகாலை, 4:00 மணிக்கு, மூலவருக்குசிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, பக்தர்கள், சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை, 11:30 மணிக்கு, சின்ன காஞ்சிபுரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், முக்கிய சாலை வழியாக காவடி எடுத்து வந்து, முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வள்ளி, தெய்வானையுடன், தங்க கவசத்தில், கந்தசுவாமி அருள்பாலித்தார்.தொடர்ந்து, அதிகாலை, 3:00 மணிக்கு துவங்கி, ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து, சரவண பொய்கையில் நீராடி, இரண்டு மணி நேரம், நீண்ட வரிசையில் நின்று, சுவாமியை தரிசித்தனர்.செங்கல்பட்டு அடுத்த, என்.ஜி.ஜி.ஓ., நகரில், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. நேற்று மாலை, சுவாமிக்கு, சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.
வல்லக்கோட்டையில் கூட்டம் இல்லை: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள, சுப்ரமணிய சுவாமி கோவில், மிகவும் புகழ்பெற்றது. ஆனால், ஆடிக்கிருத்திகை விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை, இந்த கோவில் நிர்வாகத்தினர், முறையாக செய்யவில்லை. இதனால், விசஷேமாக நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழா, மூன்று ஆண்டுகளாக, களை கட்டவில்லை.வல்லக்கோட்டை கோவில் ஆடிக்கிருத்திகை விழாவிற்காக, நேற்று, உள்ளூர் விடுமுறை விடப்பட்ட நிலையிலும், இந்த கோவிலில், எதிர்பார்த்த பக்தர்கள் கூட்டம் இல்லை. கூட்டம் குறைவாக இருந்ததால், கோவில் வளாகம் வெறிச்சோடி இருந்தது.கோவிலின் உள்ளே மழை நீர் தேங்கி, சேறும் சகதியுமாக இருந்ததால், கோவிலை சுற்றி வர பக்தர்கள் சிரமப்பட்டனர்.