ஆடி கிருத்திகை விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பேருஅள்ளி காவாக்கரையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில், ஆடி கிருத்திகை விழா நேற்று நடந்தது. இதையொட்டி முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள், 100 அடி வரை அலகு குத்தியும், கார், டிராக்டர்களை இழுத்தும், பால் குடம், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதே போல், வேப்பனஹள்ளி அருகே உள்ள பச்சைமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடந்தது. கடவரப்பள்ளி, காரகுப்பம், திம்மசந்திரம், கத்திரிப்பள்ளி, ஜெடுகொத்தூர், யானைக்கால்தொட்டி, நாச்சிகுப்பம், சிகரமாகனப்பள்ளி மற்றும் சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்காணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும், கிரேன் மூலமாக தொங்கியபடியும் கோவிலுக்கு வந்தனர். வேப்பனஹள்ளி அருகே, எட்டரப்பள்ளி முருகன் கோவிலில் நடந்த விழாவில், பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தியபடி ராட்சத ராட்டினங்களில் தொங்கியபடி கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.