உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீல நிற பட்டாடையில் அத்திவரதர்: 2 லட்சம் பேர் தரிசனம்

நீல நிற பட்டாடையில் அத்திவரதர்: 2 லட்சம் பேர் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில், அத்திவரதர் தரிசனம் நடந்து வருகிறது. நீருக்குள் இருந்த அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பின்னர் சயன கோலத்திலும், பின்னர் நின்றகோலத் திலும் தரிசனம் தருகிறார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் இன்று இளம் நீல நிற  பட்டாடையில் காட்சியளிக்கிறார். விடுமுறை நாளான இன்று சுவாமியை தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த 27 நாட்களாக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஏறத்தாழ 36 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.

3 கி.மீ.,துார வரிசை: நள்ளிரவு 12 மணி முதலே, சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் நீண்ட தூரத்தில் 4 மணி நேரமாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும்,  வயதானோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் விரைந்து தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்திற்காக குவிந்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்  பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட எல்லையில்: இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இன்று குவிந்துள்ளதால் பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்கவேண்டும். மாவட்ட  எல்லையிலும் பக்தர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காணிக்கை ; 2.95 கோடி: அத்தி வரதரை காண வந்த பக்தர்கள் 6 தற்காலிக உண்டியல்களில் 1 கோடியே 95 ஆயிரம் ரூபாயை காணிக்கையாக செலுத்தி உள்ளதாக இணை ஆணையர் செந்தில் வேலவன் தகவல் தெரிவித்துள்ளார்.

15 பேர் மயக்கம்: அத்திவரதரை தரிசிக்க காத்திருந்த 15 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !