செல்லாண்டியம்மன் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்
திருப்பூர்: செல்லாண்டியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழாவையொட்டி நேற்று அம்மனுக்கு பால்குடம் எடுத்து வரப்பட்டது.திருப்பூர் நகரின் காவல் தெய்வம் என போற்றப்படும், ஸ்ரீ செல்லாண்டியம்மன், நொய்யலாற்றின் கரையில் அருள் பாலித்து வருகிறார்.
இக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழா, கடந்த, 17ல், கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், கொடியேற்றம், குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் மற்றும் நொய்யல் நதிக்கரையில் இருந்து சக்தி அழைத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, பால் குட ஊர்வலம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலையில் பக்தர்கள், பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். சவுடேஸ்வரியம்மன் கோவிலில் தொடங்கிய ஊர்வலம் கே.எஸ்.சி., வீதி, அரிசிக்கடை வீதி வழியாக செல்லாண்டியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. அதன் பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.நாளை மாலை, 6:00 மணிக்கு, அம்மை அழைத்தல், அம்மன் திருக்கல்யாணம்; தொடர்ந்து, குண்டத்துக்கு அக்னி இடுதல் நிகழ்ச்சி; 30ம் தேதி, காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.