ஆடிக்கிருத்திகையில் குவிந்த குப்பை
திருத்தணி : திருத்தணி, முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழாவில், 20 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குப்பையை, பக்தர்கள் கொட்டிச் சென்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தால் சுகமாய் வாழலாம்.திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா, 24ம் தேதி முதல், நேற்று வரை நடந்தது.தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், காவடிகளுடன் வந்து, மூலவரை தரிசித்தனர். காவடி இல்லாமல், ஒன்றரை லட்சம் பேர் வந்தனர். இரவு, சரவணப்பொய்கையில் நடந்த தெப்பத் திருவிழாவில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள், குளத்தின் படிகளில் அமர்ந்து, உற்சவர் முருகப் பெருமானை தரிசித்தனர்.
ஆடிக்கிருத்திகைக்கு வந்திருந்த பக்தர்கள், மலர், மயில் காவடி ஆகியவற்றை தான், அதிகளவில் எடுத்து வந்தனர்.மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கை, நல்லாங்குளம் ஆகிய இடங்களில், காவடிகளுடன் வந்த பக்தர்கள், குளத்தில் புனித நீராடி, வீடுகளில் இருந்து எடுத்து வந்த மலர் மாலைகளை கழற்றினர்.பின், புதிய மலர் மாலைகளுடன், காவடிகளுக்கு பூஜை போட்டு, மலைக்கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.காவடி மண்டபத்தில், நேர்த்திக் கடனை செலுத்திய பின், பக்தர்கள், காவடிகளில் இருந்த மலர் மாலைகளை கழற்றி வீசினர். இதனால், கோவில் வளாகம் முழுவதும், பூமாலை கழிவுகள் அதிகம் கிடந்தன. இவற்றை, கோவில் சார்பில் நியமிக்கப்பட்ட, பத்மாவதி ஒப்பந்த ஊழியர்கள், 300 பேர் அகற்றினர். தவிர, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகராட்சி ஊழியர்கள், 300 பேர், 32 வாகனங்கள் மூலம், பூ மாலை குப்பையை சேகரித்து, நகராட்சி எல்லைக்கு வெளியே, பாதுகாப்பான முறையில் கொட்டினர்.ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடந்த நாட்களில் மட்டும், 900 டன் பூமாலை மற்றும் குப்பை அகற்றப்பட்டு, கோவில் வளாகத்தில், பிளீச்சிங் பவுடர் துாவினர்.
அதே போல் ஆடிப்பரணி மற்றும் ஆடிக்கிருத்திகை ஆகிய நாட்களில், 300க்கும் மேற்பட்ட இடங்களில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.அந்த வகையில் சேர்ந்த, வாழை இலை, தட்டுகள் என, 50 டன் குப்பை கழிவுகளையும், நகராட்சி, கோவில் ஊழியர்கள் அகற்றினர்.வெளியூர் பக்தர்கள் கடும் அவதிதமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, பஸ்கள் மூலம் வந்த பக்தர்களை, போக்குவரத்து நிர்வாகத்தினர், 3 கி.மீ., துாரத்தில் இறக்கி விட்டனர். இதனால், வயதான பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். கோவில் சார்பில், வினியோகம் செய்த கார் பாஸ் பெற்றவர்கள் மட்டும், மலைக்கோவில் வரை அனுமதிக்கப் பட்டிருந்தனர். சென்னை, திருப்பதி ஆகிய மார்க்கங்களில் இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரயில்களில், பக்தர் கள் கூட்டம், அதிகளவில் இருந்தது. இதனால், போக்குவரத்து துறையைவிட, ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைத்தது.