உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடுவதற்கு அடாவடி வசூல் நிறுத்தம்!

ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடுவதற்கு அடாவடி வசூல் நிறுத்தம்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில் தீர்த்தமாடுவதற்கு அடாவடியாக வசூல் செய்ததை நிறுத்தி, நபர் ஒருவருக்கு 25 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள், கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்கு தீர்த்தக் கிணறுகளில் நீர் இறைத்து ஊற்றும் பணியாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக 100 முதல் 300 ரூபாய் வரை அடாவடியாக வசூலித்து வந்தனர். கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், தீர்த்தமாடுவதை முறைப்படுத்தவும் மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் தீர்த்தமாட வரும் பக்தர்களுடன் தீர்த்தம் இறைத்து ஊற்றும் நபர்கள் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டது. தீர்த்தம் இறைத்து ஊற்றும் நபர்கள் 22 தீர்த்தங்களிலும் வாளியுடன் இருக்கவும், டிக்கட்டுடன் நீராட வரும் பக்தர்களுக்கு தீர்த்தத்தை இறைத்து ஊற்றவும் உத்தரவிட்டது, பக்தர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் கூறியதாவது: பல ஆண்டுகளாக பக்தர்களை பாதித்து வந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், தீர்த்தமாட நபர் ஒருவருக்கு 25 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பணம் வழங்கத் தேவையில்லை. தீர்த்தமாடும் சேவார்த்திகளிடம் கூடுதல் பணம் கேட்பதாகப் புகார் வந்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கோயிலுக்குத் தீர்த்தமாட வருபவர்கள் ஏஜன்ட்கள் யாரையும் அணுகாமல் நேரடியாக கோயில் தீர்த்தக் கவுண்டரில் டிக்கட் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !