பெல்லாரி அருகே கிருஷ்ண தேவராயர் காலத்து தங்க நாணய புதையல்!
பெல்லாரி: கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், சண்டூர் நகரில், விஜய நகர மன்னர் கிருஷ்ண தேவராயர் காலத்து தங்க நாணய புதையல் கிடைத்தது. கடந்த, 7ம் தேதி சண்டூர் நகரில் உள்ள ஒரு வீட்டில், தண்ணீர் தொட்டி அமைக்க பூமியை தோண்டிய போது, தங்க நாணயங்கள் பத்திரப்படுத்தப்பட்ட பழைய கால இரும்பு படி காணப்பட்டது. அந்த படியை திறந்து பார்த்த வீட்டின் உரிமையாளரும், அங்கு பூமியை தோண்ட கூலி வேலைக்கு வந்த இருவரும் தங்க நாணயங்கள் இருந்ததை கண்டனர். இதை பாதுகாப்பான இடத்தில் வீட்டின் உரிமையாளர் பத்திரப்படுத்தினார். இந்த தங்க நாணயங்களை பங்கு பிரிப்பதில், வீட்டின் உரிமையாளர் மற்றும் கூலித் தொழிலாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இத்தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் தங்க நாணயங்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்த வீட்டிற்கு போலீசார் சென்று, 213 தங்க நாணயங்கள், 110 குண்டுமணிகள், 6 தங்கத் தகடுகள் மற்றும் வெள்ளித் தகடுகளை பறிமுதல் செய்தனர். இந்த நாணயங்களின் மீது கிருஷ்ண பகவானின் உருவமும், தங்க குண்டுமணிகள் மீது மகாலட்சுமியின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இவை கிருஷ்ண தேவராயர் காலத்து தங்க நாணயங்களாக இருக்கலாம் என, தொல்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட நாணயங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய, தொல்பொருள் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சண்டூர் நகர வருவாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.