பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு யானை வழங்க பக்தர்கள் கோரிக்கை!
பெரியகுளம் : பிரசித்தி பெற்ற பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு "யானை வழங்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு முருகன், வள்ளி, தெய்வானையுடனும், சிவபெருமான் பல அவாதரங்களிலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். சூரியபகவான், சந்திரபகவான், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி, பைரவர் உள்ளிட்ட ஏராளமான தெய்வங்கள் உள்ளன. உத்திரப்பிரதேச மாநிலம் காசிக்கு அடுத்தாற்போல், இங்கு ஆற்றின் இரு புறங்களிலும் ஆண் மருதமரம் மற்றும் பெண்மருத மரம் இணைந்திருப்பது அபூர்வமாகும். பங்குனி உத்திரதிருவிழா, பிரதோஷ வழிபாடு உட்பட பல விழாக்கள் நடக்கிறது. பங்குனி தேர்த்திருவிழாவின் போது இரண்டு தேர்கள் வீதி உலா வரும். இதனை காண்பதற்கு மாவட்டத்தில் பல ஊர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர். தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பல பெருமைகளை கொண்ட பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு அரசு "யானை வழங்க வேண்டும். தேர்த்திருவிழா மற்றும் கோயில் விழாக்களில் யானை புறப்பாடு இருந்தால் "விசேஷமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.எனவே கோயிலுக்கு யானை வழங்குவதற்கு இந்து அறநிலையத்துறை முன் வரவேண்டும்.