’பகவானை அடைய பக்தியே வழி’
திருப்பூர்:’ஜீவனின் இடமாற்றம் தான் ஜனனமும், மரணமும்; பிறப்புக்கு மகிழ்ச்சியோ மரணத்துக்கு கவலையோ படக்கூடாது,’ என, சொற்பொழி வில் கருத்து தெரிவிக்கப் பட்டது. திருப்பூர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், ஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தில், மதுரை அழகர் கோவில் கோமடம் பராசர பட்டர் பேசியதாவது:மனம் என்பது குரங்கு போன்றது. அங்கு மிங்கும் அலைபாயும் குணம் கொண்டது. அதைக் கட்டுப்படுத்தி வைத்து பகவானை நோக்கிச் செலுத்த வேண்டும்.
ஜீவன் என்பது வேறு; சரீரம் என்பது வேறு. இந்த இரண்டையும் இணைப்பதாகத் தான் மனம் உள்ளது. இந்த மனம் மூலமாகத் தான் நாம் பகவானைக் காண முடியும்; அவன் திருப்பாதம் அடைய முடியும்.மனதை கட்டுப்படுத்த யோகம் செய்ய வேண்டும். அதைக் கட்டுப்படுத் தினால் மேலும் பாயும். அதற்கு ஒரே வழி, பகவானை நோக்கி மனதைச் செலுத்த வேண்டும். ஆசைகளை துறந்தவர் சன்னியாசி.ஆசை வந்தால், நியாயமான ஆசை என்றால், அதை நியாயமான முறையில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். சன்னியாசியாக இருந்து பகவனைத் தவிர வேறு எதன் மீதும் ஆசைப்படக்கூடாது.சன்னியாசியாக வேடமிட்டு, அபிலாசைக்கு ஆளாவதை விட சம்சாரியாக இருப்பது உத்தமம்.
சம்சாரியாக இருந்து பகவானை அடைவதற்கான வழி, பகவான் நாமம் பூஜிப்பது; பகவான் கதைகள், உபன்யாசம் கேட்பது; பகவான் உருவத்தை மனதில் கொண்டு வந்து தியானிப்பது என இருக்க வேண்டும்.இந்த முறையில் எளிய வகையில் பக்திசெலுத்தி இறைவனை அடையலாம்.ஜனனமும், மரணமும் உயிரின் இடமாற்றம். பிறப்புக்கு மகிழ்வதோ, இறப்பு க்கு கவலைப்படுவதோ தேவையற்றது.இவ்வாறு, அவர் பேசினார்.