குச்சனூர் கோயிலில் சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம்
சின்னமனுார்: தேனிமாவட்டம் குச்சனுார் கோயிலில் நடந்த சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்று தாலிக்கயிறு மாற்றி கொண்டனர். குச்சனுார் சுயம்பு சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவார திருவிழா ஜூலை 20 கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம் நேற்று பகல் 12:30 மணிக்கு நடந்தது. தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து உற்ஸவர் சனீஸ்வரருக்கும், நீலாதேவியாக பாவிக்கப்படும் கும்பத்திற்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். ஏராளமான பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக்கொண்டனர்.
மஞ்சனக்காப்பு: இன்று மூன்றாம் ஆடி சனிவார திருவிழா நடைபெறவுள்ளது. பினனர் இரவு 12:00 மணிக்கு மூலவருக்கு மஞ்சனக்காப்பு சாத்துப்படி செய்தல் நடைபெறும். சுயம்பு மூலவருக்கு அனுகிரக மூர்த்தியாக உருவம் கொடுப்பதற்காக மஞ்சள் கிழங்கு, எலுமிச்சை சாறு, மூலிகைகள், வெண்காரம், படிகாரம், நல்லெண்ணெய் கொண்டு கலவை தயாரிக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள் இரவு முழுவதும் மூலவருக்கு உருவம் கொடுக்கும் பணியில் ஈடுபடுவர். அடுத்த ஆண்டு மூன்றாவது சனிவாரம் வரை இந்த அலங்காரம் நல்லெண்ணெய் பூசி பாதுகாக்கப்படும்.