அத்தி வரதர் வைபவம்: 2 லட்சம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்
காஞ்சிபுரம்:காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க, நேற்று, இரண்டு லட்சம் பக்தர்கள் வந்ததால், ஐந்து மணி நேரத்திற்கும் மேல், காத்திருந்து தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கோவில் வசந்த மண்டபத்தில், 31 நாட்கள் சயன கோலத்தில் அருள் பாலித்து வந்த, அத்தி வரதர், வியாழக்கிழமை முதல், நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். 34 வது நாளான நேற்று, ரோஜா நிற பட்டாடையுடன், அத்தி வரதர் அருள்பாலித்தார். தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன், சட்டதுறை அமைச்சர், சி.வி. சண்முகம், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர், ராஜூ, பால்வளத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் நேற்று காலை தரிசனம் செய்தனர்.இதைத் தொடர்ந்து, அ.தி.முக., முன்னாள் எம்.பி., தம்பிதுரையுடன், பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர், நேற்று, மதியம், 2:30 மணிஅளவில், அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.
சென்னை நன்கொடை: உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி, மாலை, 3:30 மணிஅளவில், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்து, அத்தி வரதரை தரிசனம் செய்தார். அத்தி வரதர் வைபவத்தில் அன்னதானம் வழங்குவதற்காக, சென்னை மாநகராட்சி சார்பில், கலெக்டர் பொன்னையாவிடம், அமைச்சர், வேலுமணி, 25 லட்ச ரூபாய் வழங்கினார்.இந்த வைபவத்தில், உள்ளாட்சி துறை சிறப்பாக செயல்படுவதாகவும், ஒவ்வொரு நாளும், 25 டன் திடக்கழிவுகள் அகற்றப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமை என்பதால், நேற்று பக்தர்கள் கூட்டம் குவிந்தது. பக்தர்களை நிறுத்தி வைத்து, வரிசையாக அனுப்ப, அண்ணா அவென்யூவில், அமைக்கப்பட்டுள்ள பந்தலில், கூட்டம் நிரம்பி காணப்பட்டது. அத்தி வரதரை தரிசிக்க, வழக்கத்தை காட்டிலும் மாறாக, ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக, பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
தரிசனம் நிறுத்தம்: கோவிலின் வடக்கு மாடவீதி, கிழக்கு கோபுரம், டோல்கேட் என அனைத்து இடங்களிலும் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வந்தனர். ஆடிப்பூர உற்சவத்தின் ஒரு பகுதியான ஆண்டாள் திருக்கல்யாணம் நேற்று மாலை நடைபெற்றதால், மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை அத்தி வரதர் தரிசனம் நிறுத்தப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு மேல், வழக்கம்போல் தரிசனம் துவங்கியது. நேற்று, இரண்டு லட்சம் பக்தர்கள், அத்தி வரதரை தரிசனம் செய்தனர். வி.ஐ.பி., வரிசையில் தள்ளுமுள்ளு: வி.ஐ.பி., தரிசன வரிசையில், மதியம், 2:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலை, 4:30 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். எந்தவித பாஸ் இல்லாமல், போலீசார் குடும்பத்தினர், வி.வி.ஐ.பி., வரிசையில் சென்றதால், மேற்கு கோபுரம் அருகே, நேற்று, மதியம், 3:00 மணிக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.வி.வி.ஐ.பி., வரிசையில் செல்ல போலீசாருக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கியது யார் என்ற கேள்வியும் எழுகிறது. போலீஸ் குடும்பத்தை அனுமதிப்பவர்கள் மீது, ஐ.ஜி., நாகராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.