சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைபவம் ஆரம்பம்
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில், பொங்கல் வைத்து, பெண்கள், நேர்த்திக்கடன் செலுத்திவருகின்றனர்.
சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடி திருவிழா, கடந்த, 23 இரவு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இன்று (ஆக., 7ல்), பொங்கல், உருளுதண்டம் ஆகியவை நடக்கவுள்ளதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால், நேற்றிரவு (ஆக., 6ல்) முதலே, திரளான பெண்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்தும், உருளுதண்டம் போட்டும், நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இன்று, நாளை (ஆக., 7, 8ல்), பொங்கல், மாவிளக்கு, உருளுதாண்டம் ஆகியவை, தொடர்ந்து நடக்கும்.
கோவிலைச்சுற்றி, 30க்கும் மேற்பட்ட இடங்களில், ’சிசிடிவி’ கேமராக்களை பொருத்தி, போலீ சார், 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இன்று, உதவி கமிஷனர்கள் இருவர் தலைமையில், 120க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வர்.
அதேபோல், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று (ஆக., 6ல்) காலை, திரளான பக்தர்கள் அலகு குத்தி வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில், அம்மனுக்கு சக்தி அழை ப்பு நடந்தது. அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவிலிலும், சக்தி அழைப்பு நடந்தது. திரளான பக்தர்கள், அம்மனை வழிபட்டனர். இன்று (ஆக., 7ல்) காலை முதல், பொங்கல் பண்டிகை நடக்கிறது.