வீரபாண்டியில் ஆடி மாத சஷ்டி விரதம்: கோவில்களில் வழிபாடு
ADDED :2256 days ago
வீரபாண்டி: காளிப்பட்டி கந்தசாமி, உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில்களில், முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆடி மாத சஷ்டி விரதத்தையொட்டி, சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நேற்று (ஆக., 6ல்) காலை, மூலவர் கந்தசாமிக்கு, கோ பூஜை செய்து சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மூலவர் கந்தசாமிக்கு தங்க கவசம் அணிவித்து, ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய உற்சவர் முருகனுக்கும், சிறப்பு பூஜை செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.
திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசித்தனர். அதேபோல், சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், தனி சன்னதியில் அருள்பாலிக்கும் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.