அந்தியூர் குருநாத சுவாமி கோவில் விழா துவக்கம்
அந்தியூர் : அந்தியூர் குருநாத சுவாமி கோவில் ஆடி திருவிழா, நேற்று துவங்கியது. விழாவில் நடக்கும் கால்நடை சந்தைக்கு, விதவிதமான குதிரைகள், மாடுகள் வந்துள்ளன.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையத்தில், குருநாத சுவாமி கோவில் ஆடி பெருந்தேர் திருவிழா, நேற்று துவங்கியது. காலை, 11:00 மணியளவில், குருநாத சுவாமி, பெருமாள், காமாட்சியம்மன் சுவாமிகளை, 3 கி.மீ.,யில் உள்ள வனக்கோவிலுக்கு பக்தர்கள் எடுத்துச் சென்று, சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். விழாவில், வரும், 10ம் தேதி வரை, மாநில அளவிலான குதிரை சந்தை, மாட்டுச்சந்தை நடக்கிறது. மார்வார், கத்தியவார், இங்கிலீஸ் பீட் ரக குதிரைகள், ஆயிரக்கணக்கில் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றின் உயரம், நிறம் மற்றும் சுழிகளை வைத்து, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சில ஆயிரம் முதல், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குதிரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மாடுகளில் காங்கேயம், ஆந்திரா வகை ஓங்கோல் இனம், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் இன நாட்டு மாடுகள், முறா இன எருமைகள், சிந்து மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. 10 ஆயிரம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகின்றன. பால், இறைச்சி, அழகுக்காக வளர்க்கப்படும் அரிய வகை ஆடுகள், சண்டை கிடாய்கள், பறவைகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
மேலும், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், கால்நடைகளை அலங்கரிக்கும் அணிகலன்கள், இயந்திரங்கள் என, பல வகைகள் குவிந்துள்ளன.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், கால்நடைகள் வந்துள்ளன. எஸ்.பி., சக்திகணேசன் தலைமையில், 600 போலீசார், ஊர்க்காவல் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.