ஆக., 17 ல் குளத்திற்குள் செல்வார் அத்திவரதர் : கலெக்டர்
சென்னை : ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17ம் தேதி அனந்தசரஸ் குளத்திற்குள் கொண்டு செல்லப்படுவார் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்: திட்டமிட்டபடி ஆக.,16 ம் தேதி இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்படும். அதன் பிறகு ஆகம விதிகளின்படி பூஜைகள் நடத்தப்பட்டு, அத்திவரதரை குளத்திற்குள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெறும். ஆக.,17 ம் தேதி மாலையோ அல்லது இரவோ அத்திவரதர் குளத்திற்குள் கொண்டு செல்லப்படுவார். அத்திவரதர் தரிசன நாட்கள் நீட்டிக்கப்பட உள்ளதாக பரவும் தகவல் உண்மையில்லை. அத்திவரதர் வைபவம் ஆகம விதிப்படி தான் நிறைவடையும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்தபடி, ஆகம விதிப்படி அர்ச்சகர்களால் குளத்திற்குள் கொண்டு செல்லப்படுவார். இன்னும் 4 நாட்களே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. மக்களுக்கு தேவையான குடிநீர், அன்னதானம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் நீண்ட நேரம் வெயிலில் நிற்பதை தவிர்க்க பந்தல், கார்பெட் ஆகியன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு அறைகளும் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3000 பக்தர்கள் வரை தங்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.