உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா: குட்டைத்திடல் ஏலம்

உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா: குட்டைத்திடல் ஏலம்

உடுமலை : கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, குட்டைத்திடல் ஏலம் இன்று தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது. உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, வரும் பக்தர்களை மகிழ்விக்கும் வகையில், குட்டைத்திடலில், கடைகள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களாக சிறிய ராட்டினங்கள், மிருக காட்சி சாலைகள் அமைக்கப்படுவது வழக்கம். இதற்காக வருவாய்த்துறைக்கு சொந்தமான குட்டைத்திடல் பகுதி ஏலம் விடப்படும். இந்தாண்டும் குட்டைத்திடல் ஏலம் இன்று(30ம் தேதி) காலை 11.00 மணிக்கு உடுமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நல்லசாமி தலைமையில் நடைபெறுகிறது. கடந்தாண்டு ஆறு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டது. இந்தாண்டு அதை விட 10 சதவீதம் தொகை அதிகரிக்கப்பட்டு ஏலம் கோரப்படும். தாசில்தார் நல்லசாமி கூறியதாவது: குட்டைத்திடலில், 0.91 ஏக்கர் காலியிடம் தேர்த்திருவிழாவையொட்டி, ஏலம் விடப்படுகிறது. வரும் ஏப்., 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை அந்த இடத்தில், கேளிக்கைக்கு, விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், சிறிய ராட்டிணங்கள், மிருக காட்சி சாலை போன்றவைகள் அமைத்து பயன்படுத்திக்கொள்ள உரிமம் வழங்கும் வகையில், நாளை (இன்று) ஏலம் நடத்தப்படுகிறது. ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஏலத்திற்கான அச்சாரத்தொகை 25 ஆயிரம் ரூபாயினை ஏலம் நடைபெறுவதற்கு முன்னர் செலுத்த வேண்டும். உயர்ந்த பட்ச தொகைக்கு ஏலம் கோரும் தொகையை (அச்சார தொகை நீங்கலாக) உடனே செலுத்த வேண்டும்; அரசு நிர்ணயம் செய்யும் மதிப்பிற்கு குறைவாக ஏலம் கோர அனுமதிக்கப்பட மாட்டாது. ஏலம் ஊர்ஜிதம் செய்வது சம்மந்தமாக உடுமலை வருவாய் கோட்டாட்சியர் முடிவே இறுதியானது. ஏலத்தினை ரத்து செய்யவோ, தள்ளி வைக்கவோ ஏலம் நடத்தும் அலுவலருக்கு உரிமை உண்டு, என தாசில்தார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !