ஈரோட்டில், கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
ஈரோடு: ஈரோட்டில், கிருஷ்ண ஜெயந்தி விழா, நேற்று 23ல், கோலாகலமாக கொண்டாடப் பட்டது.
ஈரோடு, கருங்கல்பாளையம் சாய்பாபா கோவிலில், ஏராளமான குழந்தைகள் ராதா, கிருஷ் ணன் வேடமணிந்து வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பகவான் கிருஷ்ணனின், லீலைகள் சிறப்பு சொற்பொழிவு, பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், இன்றிரவு, 9:15 மணி அளவில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது. இதில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு திருமஞ்சனம், பூஜை, தீபாராதனை நடக்கிறது. நாளை 25ம் தேதி இரவு, 7:00 மணிக்கு வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது.
* மொடக்குறிச்சி, கஸ்பாபேட்டை, வரதராஜ பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வசுதேவர், கிருஷ்ணரை தாங்கி வரும் சிறப்பு தோற்றம் அமைத்து, சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசித்தனர். இந்த சிறப்பு அலங்காரத்தில், சுவாமி மூன்று நாட்களுக்கு தொடர்ந்து காணப்படும்.
அந்தியூரில் ஊர்வலம்: கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, அந்தியூர், பேட்டை பெருமாள், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், நேற்று 23ல் மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். இதில் அப்பகுதி குழந்தைகள், கண்ணன் மற்றும் ராதை வேடமணிந்து, கோலாட்டம் ஆடியபடி வந்தனர். தேர்வீதியில் தொடங்கிய ஊர்வலம், அத்தாணி சாலை வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.