காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்காதவர்கள் வசந்த மண்டபத்தில் வணங்கினர்
காஞ்சிபுரம் : அத்தி வரதர் வைபவத்தை காண முடியாத உள்ளூர், வெளியூர் பக்தர்கள், காஞ்சி புரம் வரதர் கோவிலில், அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்த, வசந்த மண்டபத்தை வணங்கி செல்கின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்தி வரதர் எழுந்தருளும் வைபவம், ஜூலை, 1ல் துவங்கி, ஆக., 17ம் தேதி நிறைவு பெற்றது. தொடர்ந்து, 48 நாட்கள் நடந்த இந்த வைபவத்தில், உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என, ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்தனர். பல்வேறு சூழ்நிலைகளால், அத்தி வரதரை தரிசிக்க முடியாத உள்ளூர், வெளியூர் பக்தர்கள், தற்போது, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரத்துவங்கி உள்ளனர்.
அவர்கள், வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் சயன மற்றும் நின்ற கோலத்திலும் அருள் பாலித்த இடத்தை, வசந்த மண்டபத்தின் ஜன்னல் வழியாக பார்த்து, வணங்கி செல்கின்றனர். சிலர், வசந்த மண்டபத்தின் முன் குடும்பத்தினருடன் நின்று, குழு புகைப்படம் எடுக்கின்றனர். பின், அத்தி வரதர் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தையும் வணங்கி செல்கின்றனர்.