சூரியபிரபை வாகனத்தில் வேணுகோபாலன் வீதி உலா
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் வேணுகோபாலன் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள வேணுகோபால சுவாமிக்கு பத்து நாட்கள் நடைபெறும் ஸ்ரீ ஜெயந்தி பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. விழாவின் 6ம் நாளான இன்று காலை 5:00 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜைகள், 7:00 மணிக்கு ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலன் சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா நடந்தது. பகல் 12:00 மணிக்கு வேணுகோபாலன் சன்னதியில், ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலனுக்கு அலங்கார திருமஞ்சனம், சேவை சாற்றுமறை நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் புறப்பாடாகி கொடிமரம் எழுந்தருளினார். தொடர்ந்து கண்ணாடி அறையில் எழுந்தருளி சாற்றுமறை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மதியம் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலனுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்று வரும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.