சிவகங்கை மாவட்டத்தில் 6 இடத்தில் சிலை கரைக்க அனுமதி
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ஆறு இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.இம்மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி தற்காலிக விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், அவற்றை கரைப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இதன்படி காவல், தீயணைப்பு, மின்வாரியம் ஆகியவற்றின் தடையில்லா சான்று, இடத்தின் உரிமையாளர் அனுமதி ஆகியவற்றுடன் வருவாய் கோட்டாட்சியர்களிடம் முன் அனுமதி பெறவேண்டும்.
சிலை வைத்த ஐந்து நாட்களுக்குள் சிலைகளை கரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க சிவகங்கை தெப்பக் குளம், மானாமதுரை அலங்காரக்குளம், இளையான்குடி சாலையம்மன் குளம், காரைக்குடி சிவன்கோயில் ஊரணி, தேவகோட்டை சிலம்பணி ஊரணி, சிங்கம்புணரி ஊரணி ஆகிய ஆறு இடங்களில் அரசாணையின் படி அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சிலைகளை நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே எடுத்துச்செல்லவேண்டும், மாட்டு வண்டிகளில் எடுத்துச்செல்லக் கூடாது, என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.