சிவகங்கை 108 சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி
சிவகங்கை: -சிவகங்கை அருகே ’பிள்ளையார் ஆச்சி’ என்றழைக்கப்படும் பெண் தன் வீட்டில் உள்ள 108 சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடினார். மதகுபட்டி சொக்கலிங்கபுரம் 2வது வீதியை சேர்ந்தவர் சோலச்சி சண்முகம். சிறுவயது முதலே விநாயகர் மீது பிரியமும், விநாயகர் வழிபாடு மீது ஆர்வமும் கொண்டவர். திருமணத்துக்கு முன்னும் பின்பும் வழிபாட்டுக்கு தேவையான விநாயகர் சிலைகளை இவரே செய்து கொள்வதுடன், மற்றவர்களுக்கும் இலவசமாக கொடுப்பார். மஞ்சள், குங்குமம், களிமண், சிமென்ட், எம்.சீல், என பல்வேறு பொருட்களை கொண்டு ஏராளமான சிலைகளை செய்து வழிபட்டு வருகிறார்.வீட்டு நுழைவுவாயிலில் ’ஹேப்பி பர்த் டே விநாயகர்’ என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ள தோடு சுவர்களில் விநாயகர் படங்களை வரைந்துள்ளார். தனது காம்பவுண்டில் விநாயகருக்கு கோயில் கட்டி, தானே செய்த சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் இவரை ’பிள்ளையார் ஆச்சி’ என்றே அழைக்கின்றனர். இவர் நேற்று 2ல், தனது வீட்டில் அப்பகுதி மக்களுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார். தான் செய்த 108 விநாயகர் சிலைகளை தனது கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார். இதற்காகவே ராமேஸ்வரத்தில் இருந்து வாங்கி வந்த வலம்புரி சங்கைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் பூஜை செய்தார். அவரது கணவர் சண்முகம் பூஜைக்கான உதவிகளை செய்தார். வீட்டில் தயாரித்த பிரசாதத்தை பக்தர்கள் அனைவருக்கும் வழங் கினார். சதுர்த்தியையொட்டி விஜர்சனம் செய்வதற்காக களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளுக்கும் பூஜை செய்தார்.