உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலை வீங்கிய விநாயகர்

தலை வீங்கிய விநாயகர்

273 அடி உயரமுள்ள திருச்சி மலைக்கோட்டையின் உச்சியில் இருக்கும் பிள்ளையாரை  ’உச்சிப்பிள்ளையார்’  என அழைக்கிறோம். ஆனால்  உண்மையில் அவரது தலை வீங்கி இருப்பதனாலேயே அவரை அவ்வாறு அழைக்கிறோம். என்பது பலருக்கு தெரியாது.

இலங்கை மன்னனான ராவணன் நயவஞ்சகமாக சீதையை கடத்தினான். மாற்றான் மனைவியை மனதால் நினைப்பதும் பாவம் எனக் கண்டித்தார் தம்பியான விபீஷணன். ஆனால் ராவணன் ஏற்கவில்லை. இந்நிலையில் சீதையைக் காணாமல் தவித்த ராமருடன் நட்பு கொண்டார் விபீஷணன். போரில் ராவணனைக் கொன்று மனைவியை மீட்டார் ராமர். அயோத்திக்கு ராமருடன் சென்ற விபீஷணன், அவரது பட்டாபிேஷக விழாவில் பங்கேற்றார். அங்கிருந்த ரங்கநாதரின் சிலை ஒன்றை ராமரிடம் பரிசாகப் பெற்றார்.

”விபீஷணா! இலங்கை செல்லும் வரை இந்தச் சிலையை தரையில் வைக்காதே. அப்படி வைத்தால் மீண்டும் உன்னால் எடுக்க முடியாது” என்றார் ராமர். தெற்கு நோக்கி வரும் வழியில் காவிரியாறு குறுக்கிட்டது. அதில் நீராடும் எண்ணமுடன், அருகில் இருந்த சிறுவன் ஒருவனின் கையில் சிலையைக் கொடுத்த விபீஷணன், ”கீழே வைத்து விடாதே” எனச் சொல்லி விட்டு நீராடினார். சிறுவனோ சிலையைக் கீழே வைத்தான்.  எவ்வளவோ முயன்றும் விபீஷணனால் அதை எடுக்க முடியவில்லை. கோபத்துடன் சிறுவனின் தலையில் குட்டு வைக்க உச்சி வீங்கியது.  சிறுவன் வடிவில் வந்தது விநாயகர் என்பது விபீஷணனுக்கு புரிந்தது. விநாயகர் வைத்த ரங்கநாதர் சிலையே ஸ்ரீரங்கத்தில் மூலவராக உள்ளது. சிறுவனாக வந்த விநாயகரே திருச்சி மலைக்கோட்டையில் உச்சிப் பிள்ளையாராக அருள்புரிகிறார்.  இங்கு மட்டுவார் குழலியுடன் தாயுமானசுவாமிக்கு தனிக்கோயில் உள்ளது. அபிஷேகத்தின் போது வீங்கிய உச்சந்தலையைத் தரிசிக்கலாம்.


* எப்படி செல்வது?

திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் இருந்து 417 படிகள் ஏற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !