உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை புறநகரில் விநாயகர் சதுர்த்தி விழா

கோவை புறநகரில் விநாயகர் சதுர்த்தி விழா

அன்னுார்:அன்னுார், பெ.நா.பாளையம், காரமடை, சூலுார், மேட்டுப்பாளையம்  பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று 2ம் தேதி கோலாகலமாக  கொண்டாடப்பட்டது.

அன்னுார்: ஒன்றியத்தில் இந்து முன்னணி சார்பில், 50 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோ மாதா பூஜை நடந்தது. ஓதிமலை ரோடு, பாத விநாயகர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று, அருகம்புல், கொழுக்கட்டை, சுண்டல் படைத்து வணங்கினர்.

தென்னம்பாளையம்: ரோட்டிலுள்ள நஞ்சுண்ட விநாயகர் கோவிலில்,  நஞ்சுண்டன் குழுவினரின் பஜனை நடந்தது.கோவை ரோடு, செல்வ விநாயகர்  கோவிலில், விநாயகருக்கு வெள்ளிகவசம் சாற்றப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.  திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இந்திரா நகரில், 12 அடி உயர ஆஞ்சநேய  விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

சூலுார்: கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை சுற்றுவட்டாரத்தில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன. கருமத்தம்பட்டி: இ.மு., மற்றும் கிராமமக்கள் சார்பில், கணபதி ஹோமம் செய்து சிலைகள் பிரதிஷ்டை நடந்தது.  

விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. சூலுார் பெருமாள் கோவில் திடலில், விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன. வக்கீல் விஜயகுமார், ஒன்றிய  தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளபாளையம்  ராமகிருஷ்ண ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்ற மாணவர்கள், தாங்களாகவே செய்த  விநாயகர் சிலைகளை செய்து வழிபாடு நடத்தினர்.

ஆசிரம நிர்வாகி கேசவானந்தமகராஜ், விநாயகர் சதுர்த்தி பூஜையை நடத்தி ஆசியுரை வழங்கினார்.பெரியநாயக்கன்பாளையம்: துடியலுார், கவுண்டம் பாளையம், சின்னதடாகம் வட்டாரங்களில், நேற்று 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

நரசிம்மநாயக்கன்பாளையம்: பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சித்தி விநாயகர் கோவிலில், அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.  
நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகர் செல்வ விநாயகர் கோவிலில், சிறப்பு  பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன.துடியலுார்: என்.ஜி.ஜி.ஓ., காலனியில்,  இந்து முன்னணி சார்பில், 25ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில், தாரை,  தப்பட்டை முழங்க ஊர்வலமும் முடிவில் அன்னதானம் நடந்தது. துடியலுார்  பஸ் ஸ்டாண்டில் பா.ஜ., மற்றும் இந்து முன்னணி இணைந்து, ஆறாம் ஆண்டு  விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடியது. மதியம் அன்னதானம்  நடந்தது.

இதில் பா.ஜ., மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள்  கவுன்சிலர் வத்சலா ஆகியோர் பங்கேற்றனர்.வடமதுரை: விருந்தீஸ்வரர் கோவில்  அருகே இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. சிறப்பு  பூஜைகளும், மாலை விநாயகர் திருவீதி உலாவும் நடந்தன. இன்று 3ம் தேதி ஸ்ரீ ஆனந்தம் திருமண மண்டபத்தில், 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது.

காரமடை: விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி இந்து இயக்கங்கள் சார்பில் காரமடை, மேட்டுப்பாளையம் பகுதியில் 312 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர்  சிலை பிரதிஷ்டை செய்யப் படுவது வழக்கம். பின்னர் ஊர்வலமாக  எடுத்துச்சென்று, பவானி ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும்.

இந்த ஆண்டு இந்து முன்னணியின் சார்பில் காரமடையில் 112, மேட்டுப்பாளையத்தில் 72, சிறுமுகையில் 41 விநாயகர் சிலைகள் என்று மொத்தம் 225 சிலைகள்.பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.விஸ்வ இந்து பரிஷத் சார்பில் சிறுமுகையில் 32, காரமடையில் 14, மொத்தம் 46 விநாயகர் சிலைகள்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில்  காரமடையில் 11 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் சார்பில்  மேட்டுப்பாளையத்தில் 12, காரமடையில் 11, சிறுமுகையில் 7 சிலைகள்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

செப்., 4 அன்று காலை முதல் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து சிலைகளும் பவானி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !