உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்டம் எவ்வளவு தூரம்?

வைகுண்டம் எவ்வளவு தூரம்?

தஞ்சையை ஆட்சி செய்த மன்னர், கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தார். ஒருமுறை இடைக்காட்டூர் சித்தர் தஞ்சாவூருக்கு வந்த போது, அவரை வம்புக்கு இழுக்க நினைத்தார் மன்னர்.

“சித்தரே! உலகை காக்கும் திருமால், வைகுண்டத்தில் இருப்பதாக  சொல்கிறீர்களே! பூலோகத்தில் இருந்து வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா?” எனக் கேட்டார்.  புன்னகைத்த சித்தர், “மன்னா! கூப்பிடு தூரத்தில் தான் வைகுண்டம் இருக்கிறது. நாம் தூய மனதுடன் அழைத்தால் திருமால் இப்போதும் வருவார்,” என்றார்.

“அப்படியானால் புராணத்தில் உதாரணம் இருந்தால் சொல்லுங்களேன்” என்றார் மன்னர்.

“கஜேந்திரன் என்னும் யானை நீர் குடிக்கச் சென்ற போது முதலையிடம் சிக்கியது. துதிக்கையை நீட்டியபடி ’ஆதிமூலமே’ என சுவாமியை அன்புடன் அழைத்தது. வைகுண்டத்தில் இருந்த திருமாலும் காத்தருள கருடன் மீதேறி வந்தார். கூப்பிடு தூரத்தில் இருந்தால் தானே அவருக்கு கேட்டிருக்கும்” என்றார் சித்தர். மன்னரும் மவுனமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !