கோவையில், விசர்ஜனம்: போக்குவரத்து மாற்றம்
கோவை:கோவையில், பிரதிஷ்டை செய்யப்பட்டவற்றில், 159 விநாயகர் சிலைகள் இன்று 4ம் தேதி விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவையில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொது மக்கள் சார்பில், 398 சிலைகள், பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவற்றில், 159 சிலைகள் இன்று 4ம் தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குளங்களில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
குனியமுத்துார் குளத்தில், 36, முத்தண்ணன் குளம்-4, சிங்காநல்லுார் குளம்-32, சூலுார் குளம்-3, வெள்ளக்கிணறு-12, செங்குளம்-3, குறிச்சி குளம்-68 சிலைகள் மற்றும் வாளையாற்றில் ஒரு சிலை விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
போக்குவரத்து மாற்றம்விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு, போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று (4ம் தேதி) மதியம், 1:00 மணிக்கு விசர்ஜன ஊர்வலம், குனியமுத்துார் தர்மராஜா கோவிலில் புறப்பட்டு, பாலக்காடு ரோடு வழியாக குனியமுத்துார் குளத்தில் கரைக்கப் படுகிறது. மதியம், 2:00 மணிக்கு போத்தனுார், சாரதா மில் ரோட்டில் துவங்கி, சங்கம் வீதியில் சங்கமித்து, சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோட்டில் சென்று, குறிச்சி குளத்தில் கரைக்கப் படுகிறது.
மதியம், 1:00 முதல் இரவு, 8:00 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மதியம், 1:00 மணி முதல், பாலக்காடு ரோட்டில் இருந்து உக்கடம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், கோவைப்புதுார் பிரிவில் இடதுபுறம் திரும்பி, குளத்துப்பாளையம் வழியாக, ஆஸ்ரம் பள்ளி சந்திப்பு சென்று, வலதுபுறம் திரும்பி, புட்டுவிக்கி ரோடு வழியாக உக்கடம் செல்ல வேண்டும்.
மதியம், 1:00 மணி முதல், உக்கடத்தில் இருந்து குனியமுத்துார் மற்றும் பாலக்காடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு, சேத்துமா வாய்க்கால் செக்போக்ஸ்ட் வழியாக புட்டு விக்கி ரோடு வையாபுரி பள்ளி சந்திப்பில் இடதுபுறம் திரும்பாமல், நேராக கோவைபுதுார் ஆஸ்ரம் பள்ளி சந்திப்பு சென்று, குளத்துப்பாளைம் வழியாக செல்ல வேண்டும்.
மதியம், 2:00 மணி முதல், உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் குறிச்சி பிரிவில் இருந்து போத்தனுார் கடை வீதி, ரயில்வே கல்யாண மண்டபம், போத்தனுார் புது பாலம், ஜி.டி., டேங்க், செட்டிப்பாளையம் ரோடு வழியாக சென்று, பொள்ளாச்சி ரோட்டை அடைய வேண்டும்.
பொள்ளாச்சி ரோட்டில் இருந்து சுந்தராபுரம் வழியாக பாலக்காடு ரோடு செல்லும் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் எல் அண்டு டி பைபாஸ் வழியாக சென்று, மதுக்கரை மார்க்கெட் ரோட்டை அடைந்து, மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக பிள்ளையார்புரம் சந்திப்பில் இடது புறம் திரும்பி, சுகுணாபுரம் சென்று பாலக்காடு ரோட்டை அடைய வேண்டும்.
பொள்ளாச்சி ரோட்டில் இருந்து சுந்தராபுரம் வழியாக, உக்கடம் செல்லும் இலகுரக வாகனங் கள் ஈச்சனாரி பிரிவில் வலதுபக்கம் திரும்பி, ஈச்சனாரி செட்டிப்பாளையம் ரோட்டை அடைந்து, இடதுபக்கம் திரும்பி, ஜி.டி., டேங்க், போத்தனுார் புதுபாலம் வழியாக போத்தனுார் கடை வீதி, குறிச்சி பிரிவு வந்து, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்ல வேண்டும்.
பொள்ளாச்சியில் இருந்து கோவை வழியாக வரும் லாரிகள் மற்றும் சரக்கு கனரக வாகனங் கள் நகருக்குள் செல்ல அனுமதியில்லை. இவ்வாகனங்கள், எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் செல்ல வேண்டும்.
விசர்ஜன ஊர்வலம் செல்லும் பாதையில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை ரோட்டில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத் தியுள்ளனர்.