விருத்தாசலம் ராயப்பர் சுவாமி கோவில் விழா கோலாகலம்
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பரவளூரில் பிரசித்தி பெற்ற ராயப்பர் சுவாமி கோவில் விழா சிறப்பாக நடைபெற்றது. ராயப்பர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
இங்கு கடந்த 30ம் தேதி ஆவணி மாத திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை, மாலை ராயப்பருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் குழந்தைப்பேறு, திருமணத் தடை, தீராத நோய்கள் தீர வேண்டி பக்தர்கள் புத்தாடை அணிந்து வேப்பிலை ஏந்தியபடி கோவில் வளாகத்தை சுற்றியுள்ள படுகளத்தில் படுத்து கொண்டனர். பின்னர் சக்தி கரகம், அக்னி கரகம் சுமந்தபடி வந்த பூசாரிகள், படுகளத்தில் படுத்திருந்த பக்தர்களை மிதித்து நடந்து சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து, பக்தர்கள் கோவில் வளாகத்தில் ஊரணி பொங்கலிட்டு வழிபட்டனர். ராயப்பர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.