சிருங்கேரி ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகள் இன்று பாலக்காடு விஜயம்!
கோவை : கோவை, ரேஸ் கோர்சில் உள்ள சாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா, சிருங்கேரி, ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகளின், "62வது ஜெயந்தி விழா மற்றும் "விஜய யாத்ரா நிகழ்ச்சிகள் கடந்த மாதம் 20ம் தேதி துவங்கியது; இன்று நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, சிருங்கேரி மகா சுவாமிகள், இன்று மாலை, பாலக்காடு விஜயம் செய்கிறார். கோவை, சாரதாம்பாள் கோவிலில், மார்ச் 28ல், ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகளின், "62வது ஜெயந்தி விழா நடந்தது. ஏப்., 1ல், ஸ்ரீ சாரதாம்பாள் கோவில் மகா கும்பாபிஷேகத்தை, சுவாமிகள் தலைமை வகித்து, நடத்தி வைத்தார். இன்று, மதியம் 12.00 மணி வரை, சாரதாம்பாள் கோவிலில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மகா சுவாமிகள், மாலை 4.00 மணிக்கு, கேரள மாநிலம், பாலக்காடு செல்கிறார். இன்று முதல், வரும் 19ம் தேதி வரை, 16 நாள், கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யும் சுவாமிகளை, அரசு விருந்தினராக அறிவித்து, கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலத்தில் தங்கியிருக்கும் 16 நாட்களும், மகா சுவாமிகள் அரசு விருந்தினராக கவுரவிக்கப்படுகிறார். இத்துடன், சுவாமிகளுடன் வரும் அவரது உதவியாளர்கள் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வரப்படும் வாகனங்களுக்கும், சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை, கேரள அரசு செய்துள்ளது.
பாலக்காடு செல்லும் சுவாமிகளுக்கு, இன்று மாலை 4.45 மணிக்கு, எல்லையான வாளையாரில், கேரள மாநில அரசு சார்பில், வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், கேரள மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் சிவகுமார், அமைச்சர் அனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இன்று, மாலை 5.30 மணிக்கு, சந்த்ரா நகர் சந்திப்பில், பாலக்காடு நகராட்சித் தலைவர், அப்துல் குதீஷ் தலைமையில், சுவாமிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு, நூரணி கிராமத்தில் உள்ள, சாரதாம்பாள் திருமண மண்டபத்தில், பூர்ண கும்ப மரியாதையுடன், சுவாமிகள் வரவேற்கப்படுகிறார். சாரதாம்பாள் திருமண மண்டபத்தில், இரவு 7.15 முதல் 8.30 மணி வரை, சுவாமிகளின் அருளுரை, பக்திப் பாடல்கள், பஜனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவு 8.35 மணிக்கு, சுவாமிகள், சந்திரமவுலீஸ்வர பூஜை செய்கிறார். நாளை (ஏப்., 5), காலை 9.15 மணிக்கு, நூரணியில் உள்ள, விநாயகர் கோவிலில், சுவாமிகள் வழிபாடு செய்கிறார். காலை 9.30 மணிக்கு, திருச்சூர் பை - பாஸ் ரோட்டில் உள்ள, சாரதாம்பாள் கோவில் கட்டப்படும் இடத்தை பார்வையிடுகிறார். 9.45 முதல், காலை 10.30 மணி வரை, பாலக்காடு - பொள்ளாச்சி ரோடு, எலப்புள்ளியில் உள்ள, எஸ்.என்.வேத பாடசாலைக்கு, விஜயம் செய்கிறார். காலை 10.45 முதல் மதியம் 12.00 மணி வரை, நூரணியில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் சுவாமிகள், பகல் 3.30 மணிக்கு, நூரணியில் இருந்து, திருச்சூர் புறப்படுகிறார்; செல்லும் வழியில், மாலை 4.00 முதல் 5.00 மணி வரை, தத்தமங்கலத்தில், பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். சிருங்கேரி, ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகள் இன்றும், நாளையும், பாலக்காடு மாவட்டத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, வரவேற்பு குழு தலைவர் என்.என்.ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.வரதராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.