கன்னியாகுமரியில் வெங்கடேச பெருமாள் கோவில்:திருப்பதி தேவஸ்தானம் முடிவு!
நகரி:தமிழகத்தின் தென்கோடி நகரமான கன்னியாகுமரியில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில், வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயார் கோவில் கட்டப்படுகிறது. தேவஸ்தான போர்டின் கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்பட்டது. கன்னியாகுமரியில் புதிதாக கோவில் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து, நேற்றுமுன்தினம் திருமலையில் நடந்த தேவஸ்தான போர்டின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர், தேவஸ்தான போர்டின் சேர்மன் பாபிராஜி, நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:கன்னியாகுமரியில் வெங்கடேச பெருமாள் கோவில் கட்டுவதற்கு தேவையான, நான்கரை ஏக்கர் நிலத்தை கன்னியாகுமரி விவேகானந்தா டிரஸ்ட், ஒதுக்கித் தந்துள்ளது. இதற்கான ஆவணங்கள் எங்களிடம் வழங்கப்பட்டுள்ளன.அங்கு, வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்ட, 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும். பழம்பெரும் நடிகை காஞ்சன மாலா, தனக்கு சொந்தமான சென்னையின் முக்கிய பகுதியில் உள்ள இடத்தை, தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அந்த இடத்தில் தேவஸ்தானம் சார்பில், கோவில் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தங்க ஆபரணங்கள்:கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை, 34 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் கோவில் உண்டியல் மூலம் காணிக்கையாகக் கிடைத்துள்ளன. வரும், 28ம் தேதி முதல் இரண்டுமாத காலத்தில் அமெரிக்காவில், 10 நகரங்களில் சீனிவாச கல்யாண உற்சவம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இத்தகைய உற்சவங்களை நடத்துவதற்கான செலவை தேவஸ்தானம் ஏற்றுக் கொள்ளாதபடி, பக்தர்கள் அளிக்கும் நிதியுதவி மூலம் நடத்தவும், இந்நிகழ்ச்சிகளை நடத்த அர்ச்சகர்கள், அதிகாரிகள் கொண்ட தனிக்குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பவும் போர்டின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், "கல்யாண மஸ்து இலவச திருமண திட்டத்தின் கீழ், திருமலை உட்பட மாநிலத்தில் பிரசித்தி பெற்ற, 11 புண்ணிய ஷேத்திரங்களில் இலவச திருமணங்கள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. வி.ஐ.பி., தரிசன அனுமதிக்கு எவ்வித நடைமுறையை செயல்படுத்துவது என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.