உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகளுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு!

சிருங்கேரி ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகளுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு!

கோவை: கேரளா சென்ற, சிருங்கேரி ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிக்கு, கோவை மாவட்ட எல்லையான வாளையாறில், அரசு மரியாதையுடன், வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை, ரேஸ்கோர்சில் உள்ள சாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா, சிருங்கேரி, ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகளின் "62வது ஜெயந்தி விழா, "விஜய யாத்ரா நிகழ்ச்சிகள், கடந்த மாதம் 20ம் தேதி, துவங்கியது. மகா சுவாமிகள், இங்கு தங்கி, பூஜைகள் செய்தார். ஏப்., 1ல், ஸ்ரீ சாரதாம்பாள் கோவில், மகா கும்பாபிஷேகத்தை, சுவாமிகள் தலைமை வகித்து, நடத்தி வைத்தார். தொடர்ந்து, 15 நாள் நடந்த இந்நிகழ்ச்சிகள்,நேற்று மதியம் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, மகாசுவாமிகள்,நேற்று, மாலை, 4.00 மணிக்கு, புறப்பட்டு, கேரள மாநிலம், பாலக்காடு சென்றார். கேரள அரசு, அவரை அரசு விருந்தினராக ஏற்று, எல்லையான வாளையாறில், சிறப்பான வரவேற்பு அளிக்க உத்தரவிட்டது. கேரளா சுற்றுலாத் துறை அமைச்சர் அனில்குமார், சுவாமிகளை, அரசு மரியாதையுடன் வரவேற்றார். கேரள விஜயம் குறித்து, மகாசுவாமிகள் பேசியதாவது: ஆதிசங்கரின் ஜென்ம பூமியான கேரளாவுக்கு, நான் விஜயம் செய்வதை, பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கேரளா அரசுக்கு, சிருங்கேரி சாரதா பீடத்தின் மீது, நீண்ட காலமாக, மிகுந்த மரியாதை உண்டு. சிருங்கேரி ஆச்சாரியார்கள், கேரளா வரும் போதெல்லாம், அவர்களை மதித்து, மரியாதையோடு வரவேற்கும் சம்பிரதாயத்தை, தொடர்ந்து பின்பற்றி வருகிறது. கேரள அரசுக்கும், முதல்வருக்கும், மக்களுக்கும், நல்லாசியை வழங்குகிறேன். கேரளாவில், 15 நாள் தங்கி, பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்து, மக்கள் அனைவரும் வளமோடு வாழ, பூஜைகள் செய்து, ஆசி வழங்க இருக்கிறேன். இவ்வாறு, மகா சுவாமிகள் பேசினார். பாலக்காடு மாவட்ட கலெக்டர் அலி அஷ்சல் பாஷா, போலீஸ் டி.எஸ்.பி., தினேஷ், பிராமண சங்கத் தலைவர் ராமலிங்கம், வரவேற்புக்குழு தலைவர் ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !