பிரசாதத்துக்கு காப்புரிமை தேவசம் போர்டு முடிவு
திருவனந்தபுரம்: கேரளாவில், பிரசித்தி பெற்ற கோவில்களை நிர்வகித்து வரும், தேவசம் போர்டு, தன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்களுக்கு காப்புரிமை பெற முடிவு செய்துள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களை நிர்வகிக்க, திருவாங்கூர் தேவசம் போர்டு என்ற அரசு அமைப்பு செயல்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, சபரிமலை அரவணை என்ற பெயரில், பிரசாதம் வழங்கப்படுகிறது. அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் பால் பாயசம், கொட்டாரக்கரா ஸ்ரீ விநாயகர் கோவிலில் உன்னியப்பம் போன்ற பிரசாதங்களளை, தேவசம் போர்டு தயாரித்து வழங்கி வருகிறது.
இந்த பிரசாதங்கள் அனைத்தும், தனிச் சுவையுடன் தயாரிக்கப்படுகின்றன.இந்நிலையில், இதே பெயரில், வேறு சில தனி நபர்கள் மற்றும் தனி நிறுவனங்கள், பிரசாதங்களை தயாரித்து, பக்தர்களுக்கு வழங்கி வருவதாக புகார் எழுந்தது.இதை தடுப்பதற்கான நடவடிக்கை குறித்து, தேவசம் போர்டு தலைவர் பத்ம குமார் கூறியதாவது: தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் செயல்படும் கோவில்களில் வழங்கப்படுவது போன்ற பிரசாதங்களை, வேறு சில தனி நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்வதாக, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வந்தது. தேவசம் போர்டு, எந்த பெயரில் பிரசாதங்களை தயாரிக்கிறதோ, அதே பெயரில், இந்த நிறுவனங்களும் பிரசாதங்களை தயாரித்து விற்கின்றன. இதனால், பக்தர்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதை தடுப்பதற்காக, நாங்கள் தயாரிக்கும் பிரசாதங்களுக்கு, புவிசார் குறியீட்டு எண்ணுடன், பேடன்ட் எனப்படும், காப்புரிமை பெற முடிவு செய்துள்ளோம். இதன் மூலம், நாங்கள் தயாரிக்கும் பிரசாதங்களை, வேறு நிறுவனங்கள் தயாரிப்பது தடுக்கப்படும். அவ்வாறு தயாரித்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.